ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இனிமேல் அநீதி இழைக்க மாட்டார்கள் என நம்புவதாக, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை பீ.பீ.குளம் சங்கீதா தாக்கல் செய்த மனு: சிவகங்கை புழுதிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில், பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன். ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் மூலம், மதுரை திருப்பாலை அரசு உயர்நிலை பள்ளிக்கு மாறுதல் செய்து 2012 ஜூலை 24 ல் உத்தரவிடப்பட்டது.
2012 ஆக.,22 வரை அப்பள்ளியில் நான் பணியில் சேரவில்லை எனக்கூறி, ஆசிரியை கிரிஜாவை அங்கு கல்வித்துறை அதிகாரிகள் இடமாறுதல் செய்தனர். கவுன்சிலிங் முடிவை அதிகாரிகள் மதிக்கவில்லை. கவுன்சிலிங் முடிவின்படி, திருப்பாலை பள்ளிக்கு இடமாறுதல் செய்து, பணியாற்ற அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.நாகமுத்து, "மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மனுதாரர் இடமாறுதல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என்றார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டதால், மனுதாரரே ஆஜரானார். அவரை, திருப்பாலை அரசு உயர்நிலை பள்ளிக்கு மாறுதல் செய்து, அதற்கான உத்தரவை, முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி சமர்ப்பித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதி உத்தரவு: இவ்வழக்கில், மனுதாரரான இப்பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து, உரிய ஆதாரங்களுடன் மூத்த வக்கீல் போல் வாதிட்டார். இது, சிலப்பதிகாரத்தில் கண்ணகி கால் சிலம்புடன் மதுரையில் நீதி கேட்டு வாதாடியதுபோல் இருந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனிமேல் இதுபோன்ற அநீதியை இழைக்க மாட்டார்கள் என நம்புகிறேன். மனு பைசல் செய்யப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment