தமிழகத்தில் வட்டார வளமையத்தின் ஆசிரிய பயிற்றுநர்களை பணிமாறுதல் செய்ய வேண்டுமென்ற அரசின் கட்டாய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென பயிற்றுநர்கள் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்திடவும், அரசின் திட்டங்களை மாணவர்களிடையே கொண்டு செல்வதோடு அதை தொடர்ந்து கண்காணிக்கவும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்கள்தோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஒரு வட்டார வளமையம் உருவாக்கப்பட்டது. அதில் வட்டார வளமைய மேற்பார்வையாளரின் கீழ் பட்டதாரி ஆசிரியர்களின் நிலையிலான ஆசிரிய பயிற்றுநர்கள் பணியாற்றினர். அரசு தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இவர்கள் செயல்வழிக்கற்றல், எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி, படைப்பாற்றல் கல்வி போன்ற கற்பிக்கும் முறைகளை கொண்டு சேர்ப்பது, ஒவ்வொரு பள்ளியிலும் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்வது, பள்ளியில் உள்ள வசதிகள், தேவையானவை குறித்தும் உயர் அலுவலர்களுக்கு தெரிவித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அரசால் அறிவிக்கப்படும் புதிய திட்டங்களும் இவர்கள் மூலம் அந்தந்த வட்டார ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
கடந்த 2001-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் சுமார் 8 ஆயிரம் ஆசிரிய பயிற்றுநர்கள் பணிபுரிந்தனர்.
பயிற்றுநர்களும் பட்டதாரி ஆசிரியர்கள் நிலையிலானவர்கள் என்பதால் இவர்களில் ஆண்டுக்கு 500 பேர் வீதம் பணி மூப்பு அடிப்படையில் தனியாக கலந்தாய்வு நடத்தி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கு ஆசிரியர்களாக அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு காலிப்பணியிடத்துக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். இவ்வாறு பள்ளிக்கு மாறுதலானவர்கள் போக தற்போது தமிழகமெங்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 135, திருச்சி 165, அரியலூர் 107, சிவகங்கை 136, மதுரை 147, தஞ்சாவூர் 158 என மொத்தம் 4,587 பேர் பயிற்றுநர்களாக உள்ளனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிக்கு மாற்றப்படாமல் அதே வட்டார வளமையத்திலேயே பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் ஆசிரிய பயிற்றுநர்களை இடமாற்றம் செய்ய வேண்டுமென ஜூன் 9-ம் தேதி மாநில கல்வித் துறைச் செயலர் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கடந்த மாதம் கடைசி வாரத்தில் இடமாறுதலுக்கான உத்தரவை பெற்ற பயிற்றுநர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து பாதிப்புக்குள்ளாகியுள்ள ஆசிரிய பயிற்றுநர்கள் கூறியது: கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தந்த வருடமும் தமிழகத்தில் இருந்து பணி மூப்பு அடிப்படையில் 500 பேர் தேர்வு செய்து தனியாக கலந்தாய்வு நடத்தி பள்ளிக்கு மாற்றம் செய்தனர்.
இதன்மூலம் அவரவர் விருப்பத்துக்கு பள்ளியை தேர்வு செய்தனர். கடந்த 3 ஆண்டுகளாக எங்களை பள்ளிக்கு மாற்றம் செய்யவில்லை. இதுகுறித்து அரசிடம் வலியுறுத்தியபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது எங்களை வேறு வட்டார வளமையத்துக்கு கட்டாயப்படுத்தி மாற்றியுள்ளது அரசின் விதிமீறலாம்.
அலுவலராக இருப்பவர்கள் 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் மாற்றம் செய்யலாமென்ற விதியை ஆசிரியர்களாகிய எங்கள் மீது திணித்திருப்பது தவறானது.
இந்த நடவடிக்கை அனைவருக்கும் கல்வி திட்டத்தில் வட்டார வளமைய பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்ட 13 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத செயலாகும்.
தற்போது தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள்கூட அவரவர் விருப்பத்துக்கு கலந்தாய்வு மூலம் வீட்டின் அருகேயுள்ள ஒரு பள்ளியை தேர்வு செய்யும் நிலையில் இத்தனை ஆண்டுகள் பணிபுரிந்த எங்களை திடீரென பணியிடமாற்றம் செய்யவேண்டுமென்ற கல்வித் துறை செயலரின் உத்தரவை தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
No comments:
Post a Comment