பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்வித் தகுதியை பள்ளிகளில் ஆன்-லைனில் பதிவு செய்ததில் ஏற்பட்ட குளறுபடியால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானவுடன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்திற்கு சென்று கல்வித் தகுதிகளை பதிவு செய்வர். சீனியாரிட்டி போய் விடும் என்பதால் மதிப்பெண் சான்றிதழ் கிடைத்தவுடன், மாணவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்வர்.
இதனால் அங்கு கட்டுக்கடங்கா கூட்டம் இருக்கும். இதை தவிர்ப்பதற்காக அரசு எளிய முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன்படி பள்ளிகளில் குறிப்பிட்ட நாட்களுக்குள் உரிய சான்றுகளை மாணவர்களிடம் பெற்று ஆன்-லைனில் பள்ளிகளில் பதிவு செய்து கொடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இதில் தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது. அந்த பள்ளியில் படித்த மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை தலைமையாசிரியர்களிடம் கொடுத்து விட்டனர். அதன்பிறகு மேல்நிலை வகுப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். தற்போது சில பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், தங்கள் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியலை சரி பார்த்து அதற்கான சான்றிதழ்களை கேட்டனர். இதில் சில மாணவர்களின் பெயர் வேலைவாய்ப்பு பதிவில் இருந்து விடுபட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் இந்த தகவல் அறிந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உதாரணமாக தேனி அருகே உள்ள ஓடைப்பட்டி பள்ளியில் படிக்கும் 20 மாணவர்கள் பதிவு இது போல் விடுபட்டுள்ளது. அவர்கள் தற்போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வந்து பதிந்து செல்கின்றனர். இது போல் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் நடந்துள்ளதாக தெரிகிறது.
வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, "சில அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் இணையதள வசதி இல்லை. அது போன்ற பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவர்களிடம் விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களை பெற்று தனியார் "பிரவுசிங்" மையங்களின் உதவியுடன் பதிவு செய்து உரிய சான்றிதழ்களை கொடுத்து விடுகின்றனர். ஆனால் சில பள்ளிகளில் இது போன்று விடுபட்டுள்ளது. இணையதள வசதி இல்லாத பள்ளிகளில் மாணவர்களின் சான்றிதழ்களை சேகரித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கொடுத்தால் நாங்களே பதிவு செய்து கொடுத்துவிடுவோம்" என்றார்.
No comments:
Post a Comment