Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 20 July 2014

வெளி மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பு: ஆய்வு செய்து அங்கீகரிக்க உத்தரவு

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்புகளை முடித்திருந்தால் அம்மாநில பாடத்திட்டங்கள் தமிழக பாடத்திட்டத்திற்கு இணையாக இருக்கிறதா என ஆய்வு செய்த பின் பிற மாநில சான்றிதழ்களை அங்கீகரிக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்கண்ட மூன்று மாநில எல்லையோர தமிழக மாவட்டங்களில் வசிக்கும் மாணவர்கள், அண்டை மாநிலங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கின்றனர். பின் வேலைவாய்ப்பிற்காக தமிழக அரசு நடத்தும் தேர்வுகளை எழுதுகின்றனர். இதற்காக பிற மாநில பாடத்திட்டம் தமிழக பாடத்திட்டத்திற்கு இணையானவை என அம்மாநிலங்களில் தரப்பட்ட சான்றிதழுக்கு தமிழக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி துறையிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
இதன்படி ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி துறையும் ஒப்புதல் வழங்கி வந்தது. இந்நிலையில் கடந்த 2008 - 09ல் தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சிக்கு புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக புதிய பாடத் திட்டத்திற்கு நிகராக அண்டை மாநில பாடத்திட்டங்கள் இருக்காது என நினைத்து வெளி மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்த தமிழக மாணவர்களுக்கு, ஒப்புதல் அங்கீகாரம் வழங்குவதை தற்காலிகமாக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி இயக்குனரகம் நிறுத்தி வைத்தது.
மாணவர்கள் கோரிக்கை
இந்நிலையில் அண்டை மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்த ஏராளமான மாணவர்கள் தமிழக ஆசிரியர் பயிற்சி கல்வி துறைக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று அண்டை மாநில பாடத் திட்டங்கள் தமிழக பாட திட்டங்களுக்கு நிகராக இருக்கிறதா என இயக்குனரகம் ஆய்வு செய்தது. இதில் தமிழக பாடத் திட்டங்களுக்கு இணையாக அண்டை மாநில பாடத்திட்டங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அண்டை மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்த மாணவர்களுக்கு ஒப்புதல் அளிக்கலாம் என தமிழக அரசுக்கு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சித்துறை இயக்குனர் பரிந்துரை செய்தார்.
புதிய அரசாணை
இதை ஏற்று அண்டை மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்த மாணவர்களின் சான்றிதழ்களை, ஆய்வுக்குப் பின் துறை இயக்குனர் ஒப்புதல் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புதிய அரசாணையையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விரைவில் தமிழக அரசின் அங்கீகாரம் அளிக்கப்படும் என துறை வட்டாரம் தெரிவித்தது.

No comments: