அரசுத் துறைகளுக்கு அளிக்கும் ஆவணங்களுக்கு சுயசான்றொப்பம் அளித்தால் போதும். அரசிதழில் பதிவு பெற்ற அரசு அதிகாரியிடமோ, நோட்டரி வழக்கறிஞரிடமோ சான்றொப்பம் (‘அட்டஸ்டேஷன்’) பெறத் தேவையில்லை என்று மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது:
பல்வேறு அரசுத் துறைகளில் தற்போதுள்ள நடைமுறையை ஆய்வு செய்து, பல்வேறு விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டிய ஆவணங்களுக்கு சுயசான்றொப்பம் அளித்தால் போதும் என்ற நடைமுறையை படிப்படியாக அமல்படுத்த முயற்சி செய்யுங்கள். இந்த புதிய முறை மக்களுக்கு வசதியாக இருப்பதுடன், பண விரயம், நேர விரயம் தவிர்க்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிர்வாகச் சீரமைப்பு மற்றும் மக்கள் குறைகேட்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தங்களின் ஆவணங்களில் நோட்டரி வழக்கறிஞரிடம் சான்றொப்பம் பெறுவது மக்களுக்கு மிகவும் சிரமமான பணியாக உள்ளது. இதற்கென ரூ.100 முதல் 500 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, சான்றிதழ்களில் சுயசான்றொப்பம் அளித்தால் போதும் என்ற நடைமுறையை கொண்டு வருவது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. எனினும், சட்டப்பூர்வமான பணிகளில் சுயசான்றொப்பம் அளிப்பதை அனுமதிக்க முடியாது. நோட்டரி வழக்கறிஞர் அல்லது அரசிதழில் பதிவுபெற்ற அதிகாரிகளிடம்தான் சான்றொப்பம் பெற வேண்டியதிருக்கும்” என்றார்.
இரண்டாவது நிர்வாக சீரமைப்பு கமிஷனின் பரிந்துரைப்படியே, சான்றொப்பம் பெறுவதை எளிமைப்படுத்தும் யோசனையை மத்திய அரசு முன்வைத்துள்ளது.
இதன்படி விண்ணப்பங்களுடன் இணைக்கப்படும் மதிப்பெண் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் போன்றவற்றுக்கு விண்ணப்பதாரரே சுயசான்றொப்பம் அளிக்கலாம். அவற்றை சரிபார்க்க, நேர்காணலின்போது அசல் சான்றி தழ்களை அளிக்க வேண்டும்.
அலைக்கழிப்பு இருக்காது
மத்திய அரசின் இந்த புதிய திட்டத்தால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசுக்கான முன்னாள் கூடுதல் சொலிசிடர் ஜெனரலுமான பி.வில்சன்.
“தமது ஆவணங்கள் உண்மைதான் என்பதை உறுதிப்படுத்த அரசிதழில் பதிவு பெற்ற அரசு அதிகாரி அல்லது நோட்டரி வழக்கறிஞரிடம் சான்றொப்பம் பெறுவதற்காக பொதுமக்கள் எதிர்கொள்ளும் அவதிகள் ஏராளம்.
இந்நிலையில் தாங்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களுக்கு தாங்களே சுய சான்றொப்பம் அளித்தால் போதும் என்ற திட்டத்தால் பொதுமக்களின் அலைச்சல் மட்டுமின்றி, பணச் செலவும் இனி இருக்காது.
அலைக்கழிப்பு இனி இருக்காது என்றாலும், பொதுமக்களின் பொறுப்புணர்வு முன்பைவிட இப்போது அதிகரிக்கும். இதுநாள் வரை தாங்கள் தாக்கல் செய்யும் ஆவணங்களின் நம்பகத்தன்மையில் ஏதேனும் பிரச்சினை எழுந்து, அது போலி ஆவணம் என தெரியவந்தால் சான்றொப்பம் அளித்தவர்களை கை காட்டி விடலாம். ஆனால், இனி சுய சான்றொப்பம் என்பதால், தங்கள் ஆவணங்களின் நம்பகத்தன்மையை காப்பாற்ற வேண்டிய முழு பொறுப்பும் அதனை தாக்கல் செய்யும் பொதுமக்களுக்கே உள்ளது. ஏதேனும் போலி ஆவணங்களில் சுய சான்றொப்பம் அளித்தது பின்னர் தெரியவந்தால், அவ்வாறு சான்றொப்பம் செய்தவர்கள் குற்ற நடவடிக்கையை எதிர்கொண்டு, சிறை செல்லவும் நேரிடும். ஆகவே, சரியான ஆவணங்களில் மட்டுமே சுய சான்றொப்பம் செய்யவேண்டிய கட்டாயம் பொதுமக்களுக்கு உள்ளது” என்றார் வில்சன்.
No comments:
Post a Comment