அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்குகின்றன. மருத்துவ மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்துவர தடை விதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான முதல் கட்ட கவுன்சலிங் கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த கவுன்சலிங்கில் தமிழகத்தில் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,023 எம்.பி.பி.எஸ். இடங்கள், 7 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரியில் 498 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 இடங்கள் என மொத்தம் 2,606 இடங்கள் நிரப்பப்பட்டன.
மாணவ, மாணவிகள் தாங்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதிக் கடிதத்தை பெற்றுள்ளனர்.
செப்டம்பர் 1-ல் வகுப்பு
இதையடுத்து கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை கடந்த வாரம் நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாண்டு வகுப்புகள் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ளன.
மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வரும் முதலாண்டு மாணவ, மாணவிகள் என்ன மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டி.எம்.இ.) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெற்றோருக்கும் தகவலை தெரிவித்துள்ளனர்.
ஜீன்ஸ், டி-சர்ட் தடை
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட் போன்ற ஆடைகளை அணியக் கூடாது. மாணவிகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற ஆடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும். தலைமுடியை விரித்து விடாமல் இறுக்கமாக கட்டிக்கொண்டு வகுப்புக்கு வரவேண்டும்.
அதேபோல மாணவர்கள் பேன்ட், முழுக்கை சட்டை அணிந்து இன் செய்து கொண்டும், ஷூ அணிந்தும் வர வேண்டும்.
ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து வருபவர்கள் வகுப்புக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். டாக்டருக்கு படிக்க வருபவர்கள் கண்ணியமாக தோற்றம் அளிக்க வேண்டும். அதனால்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்கள் வரவேற்பு
இதுகுறித்து தமிழ்நாடு பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறியதாவது:
டாக்டர்கள் என்றால் சமுதாயத்தில் ஒரு மரியாதை உள்ளது. அதனை காப்பாற்றவே அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது என சொல்கின்றனர். இதனை மருத்துவம் படிக்கும் மாணவ, மாணவிகளும் வரவேற்கின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment