தமிழகத்தில் இதுவரை கருப்பு வெள்ளையாக வழங்கப்பட்டு வந்த வாக்காளர் அட்டைகளை வண்ணத்தில் அளிக்கும் பணி ஜூலையில் துவங்க உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
இந்தியாவில் சில பாகங்களில் வாக்காளர்களுக்கு வண்ணத்தில் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் வண்ண அட்டைகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை முடிவு செய்துள்ளோம். ஆனால், அதற்க ஆகும் செலவுத் தொகை குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஒரு அட்டைக்கு ரூ.2.10 என்ற வீதத்தில் கருப்பு வெள்ளை அட்டைகளை தயாரித்தோம். கலர் அட்டை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான குறிப்பாணைகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. ஓட்டுநர் உரிமம் போல் கலர் அட்டைகள் இருக்கும்.
போலி அட்டைகள் தயாரிப்பதை தடுப்பதற்காக ஹோலோகிராம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அதில் அளிக்கப்பட்டு இருக்கும். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வாக்காளர்களைச் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அந்த முகாம்களின் மூலம் 12 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படவில்லை.
எனவே 12 லட்சம் வாக்காளர்களுக்கும், புதிதாக அடையாள அட்டை வாங்க விண்ணப்பிப்பவர்களுக்கும் வாக்காளர் வண்ண அடையாள அட்டை வழங்கப்படும். இந்தப் பணிகள் ஜூலை இறுதியில் தொடங்கும் என்றார் பிரவீண்குமார்.
No comments:
Post a Comment