Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 18 June 2014

அண்ணாமலைப் பலகலைக்கழக MBBS ரேண்டம் எண்கள்: நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா வெளியிட்டார்


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் (சுயநிதி) படிப்புகள், பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகள், பிபிடி, பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் படிப்புகளுக்கான ரேண்டம் எண்களை தமிழகஅரசு முதன்மை செயலாளரும், பல்கலைக்கழக நிர்வாகியுமான ஷிவ்தாஸ்மீனா புதன்கிழமை காலை வெளியிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர 7651 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் மாணவர்கள் 3011 பேர்களும், மாணவியர்கள் 4640 பேர்களும் அடங்குவர். விண்ணப்பித்தவர்கள் 11 பேர் மாற்றுத்திறனாளிகள். பிஎஸ்சி வேளாண்மை மற்றும் பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளில் சேர 11,654 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் மாணவர்கள் 5671 பேரும், மாணவியர்கள் 6037 பேரும் அடங்குவர். இதில் மாற்றுத்திறனாளிகள் 36 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  பிபிடி, பிஎஸ்சி நர்சிங், பி.ஃபார்ம் ஆகிய படிப்புகளில் சேர 947 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் மாணவர்கள் 198 பேரும், மாணவியர்கள் 749 பேரும் அடங்குவர். இதில் மாற்றுத்திறனாளிகள் 27 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஜூன் 20-ல் ரேங்க் மற்றும் கவுன்சிலிங் பட்டியல்: பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவப்படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலும், கவுன்சிலிங் நடைபெறும் விபரங்கள் குறித்து வருகிற ஜூன் 20-ம் தேதி அறிவிக்கப்படும். கவுன்சிலிங் குறித்து விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்படும். எஸ்எம்எஸ் மூலமும் தகவல் அனுப்பப்படும்.


2014-15 கல்வி ஆண்டிற்கு எம்பிபிஎஸ் 150 இடங்கள், பிடிஎஸ் 100 இடங்கள் ஆகியவற்றிற்கான அனுமதி சேர்க்கை கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறவுள்ளது.  பிஇ படிப்பிற்கு 3 ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்சி வேளாண்மை படிப்பிற்கு ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்சி தோட்டக்கலை படிப்பிற்கு 75 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள். அனுமதி சேர்க்கை முற்றிலும் தகுதி அடிப்படையிலும், அரசு விதிமுறைகள் இடஒதுக்கீடு முறையில் நடைபெறுகிறது என ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் பதிவாளர் என்.பஞ்சநதம், பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ், புல முதல்வர்கள் ஜே.வசந்தகுமார் (வேளாண்மை), டி.வேலுசாமி (பொறியியல்), ராஜேந்திரன் (கலைத்துறை), என்.என்.பிரசாத் (மருத்துவம்), டாக்டர் மைதிலி (பல்மருத்துவம்), தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் ஆர்.எம்.சந்திரசேகரன், கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளர் டி.ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும். ரேங்க் பட்டியல் மற்றும் கலந்தாய்வு அட்டவனை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்றும்,  மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடங்கள் தமிழகஅரசு விதிப்படி ஒதுக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் வேளாண்மை படிப்பில் சேர விண்ணப்பத்தவர்கள் ரேண்டம் எண்களை  அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளம்www.annamalaiuniversity.ac.in என்ற முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 


விண்ணப்பித்தவர்களின் 50 சதவீதத்திற்கு மேல் மாணவியர்கள்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் வேளாண்மை படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதத்திற்கு மேல் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக பிபிடி, பிஎஸ்சி நர்சிங், பி.ஃபார்ம் படிப்புகளுக்கு 90 சதவீதம் மாணவியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

No comments: