அனைத்து நிலை ஆசிரியர் கல்வியிலும் விரைவில் அதிரடி சீர்திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது என தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.
ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதோடு, அனைத்து நிலை ஆசிரியர் படிப்புகளின் படிப்புக் காலமும் அதிகரிக்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 7-ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான பி. பழனியப்பன் தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சந்தோஷ் பாண்டா பேசியது:
உயர் கல்வி வழங்குவதில் தொலைதூரக் கல்வி முறையும் முக்கியப் பங்காற்றி வருகிறது.
அதேநேரம், இந்த தொலைதூரக் கல்விக்கென ஒரு முழுமையான தேசிய கொள்கை எதுவும் இதுவரை இல்லை. இருந்தபோதும், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விக் கவுன்சிலின் கீழ் தொலைதூர கல்வி நிறுவனங்கள் இயங்கியபோதும், தரமான தொலைதூரக் கல்வி வழங்குவது உறுதி செய்யப்பட்டது.
இந்த கல்வித் தரம் இப்போதும் தொலைதூரக் கல்வியில் காக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதுபோல், ஆசிரியர் கல்வியிலும் தரத்தை உறுதி செய்வதற்காக மிகப் பெரிய சீர்திருத்தத்தை தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள 16 ஆயிரம் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் 90 சதவீதம் தனியார் கல்லூரிகளாகும்.
எனவே, தரத்தை உறுதி செய்வதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டி நெறிகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இதுவரை ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு அங்கிகாரம் அளிக்கும் பணியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணியை தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலே மேற்கொள்ளும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
மேலும், ஆசிரியர் கல்வி பாடத் திட்டங்களில் மிகப் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதோடு, அனைத்து நிலை படிப்புகளின் படிப்புக் காலமும் அதிகரிக்கப்பட உள்ளது.
அதாவது, பி.எட்., எம்.எட். படிப்புகளின் காலம் இனி இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது. மேலும் பிளஸ்-2 முடித்தவுடன் ஆசிரியர் கல்வியில் சேரும் வகையில், புதிய 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு, 4 ஆண்டு ஒருங்கிணைந்த தொடக்கக் கல்வி பட்டப் படிப்பு, 4 ஆண்டு ஒருங்கிணைந்த இடைநிலைக் கல்வி பட்டப் படிப்பு, 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.,பி.எட்., மற்றும் பி.எஸ்சி.,பி.எட். படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
உடற்கல்வி, மழலையர் கல்வியிலும் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன என்றார் அவர்.
விழாவில் துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பிடித்த 227 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பி. பழனியப்பன் பட்டச் சான்றிதழ்கள் மற்றும் தங்கப் பதக்கத்தை வழங்கினார்.
இவர்களில் பி.சி.ஏ. இளநிலை பட்டப் படிப்பில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற திண்டுக்கலைச் சேர்ந்த மாணவி அருள் பிரியங்காவுக்கு ரூ. 25,000 ரொக்கப் பரிசுடன் கூடிய ஆசியாவுக்கான காமன்வெல்த் கல்வி ஊடக மைய விருது வழங்கப்பட்டது.
இவர்களைத் தவிர ஆராய்ச்சிப் படிப்புகளை முடித்த 11 மாணவர்களும், 4,751 முதுநிலை பட்டதாரிகளும், 12,808 இளநிலை பட்டதாரிகளும், 3,852 பட்டய மாணவர்களும், 92 முதுநிலை பட்டய மாணவர்களும் விழாவில் பங்கேற்காமல் பட்டம் பெற்றனர்.
No comments:
Post a Comment