தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு நேரடி இரண்டாண்டு சேர்க்கைக்கு அரசு ஒதுக்கீட்டிற்கான மாநில அளவிலான கலந்தாய்வு காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 19-ந்தேதி தொடங்கி ஜூலை 2-ந்தேதி வரை நடைபெறவுள்ளது என்று கல்லூரி முதல்வரும், கலந்தாய்வுச் செயலருமான அ. மாலா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் என 534 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் நேரடி இரண்டா மாண்டு சேர்க்கைக்காக 1 லட்சம் இடங்கள் உள்ளன. நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்காக பூர்த்திசெய்யப்பட்ட 21,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தகுதிவாய்ந்த மாணவர்கள் அனைவருக்கும் இக்கலந்தாய்வின் மூலம் சேர்க்கைக்கான இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இக்கலந்தாய்வுக்கு கட்-ஆப் மதிப்பெண்கள் வாரியாக தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியல் இக்கல்லூரியின் www.accet.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தங்கள் தரவரிசை குறித்து மாணவர்கள் பார்த்துக்கொள்ளலாம். மேலும் தரவரிசைப்படி கலந்தாய்வுக்கு வர அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லையென்றாலோ, தரவரிசைப்பட்டியலில் பெயர் இல்லையென்றாலோ உரிய தகுதி இருந்து ஆதாரம் சமர்ப்பித்து கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
ஜூன் 19-ந்தேதி கணிதத்தை பாடமாகக் கொண்டு பி.எஸ்சி படித்த மாணவர்களுக்கு காலை 9 மணி முதல் 11 மணி வரையும், விளையாட்டு வீரர் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு காலை 11 மணி முதல் மதியம் 2 மணிவரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை சிறப்புப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
ஜூன் 20-ந்தேதி டிப்ளமோ கெமிக்கல் படித்தவர்களுக்கு காலை 8 மணி முதல் 10 மணிவரையும், டெக்ஸ்டைல்ஸ், லெதர், பிரி்ண்டிங் படித்தவர்களுக்கு காலை 10 மணிமுதல் 12 மணிவரை கலந்தாய்வு நடைபெறும். டிப்ளமோ சிவில் படித்தவர்களுக்கு ஜூன் 20-ந்தேதி 93.71 சதவீத கட்-ஆப் மதிப்பெண்ணில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கி ஜூன் 22-ந் தேதி மாலை 6 மணிவரை 54.875 சதவீத கட்-ஆப் மதிப்பெண்கள் வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஜூன் 23-ந்தேதி டிப்ளமோவில் மெக்கானிக்கல் படித்தவர்களுக்கு 96.215 சதவீத கட்-ஆப் மதிப்பெண்ணில் காலை 8 மணிக்கு தொடங்கி ஜூன் 27-ந்தேதி காலை 11 மணிவரை 54.584 சதவீத கட்-ஆப் மதிப்பெண்கள் வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூன் 27-ந்தேதி டிப்ளமோவில் எலெக்ட்ரிக்கல் படித்தவர்களுக்கு 98.75 சதவீத கட்-ஆப் மதிப்பெண்ணில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கி ஜூலை 2-ந்தேதி மாலை 6 மணிவரை 53.75 சதவீத கட்-ஆப் மதிப்பெண்கள் வரை கலந்தாய்வு நடைபெற்று நிறைவடைகிறது.
மாணவர்கள் கலந்தாய்வுக்கு 1 மணி நேரம் முன்னதாகவே வரவேண்டும். 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ், டிப்ளமோ சான்றிதழ், புரோவிசனல், சாதிச்சான்று, நன்நடத்தை சான்று தேவைப்பட்டால் இருப்பிடச்சான்று ஆகியவை அனைத்தும் ஒரிஜினலை கொண்டுவந்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். மாணவர்கள் கலந்தாய்வுக்கு வந்து செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கலந்தாய்வு நடைபெறும் வளாகத் தில் கேன்டீன் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment