சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் ஜூன் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15 ஆண்டிற்கான பிஇ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் கடந்த மே.9-ம் தேதி முதலும், பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளில் சேர மே.12-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன்.2-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. அனுமதி சேர்க்கை முற்றிலும் தகுதி அடிப்படையிலும், அரசு விதிமுறைகள் இடஒதுக்கீடு முறையில் கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இதுவரை பொறியியல் படிப்பில் சேர 2511 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன.
ஜூன் 16-ல் ரேண்டம் எண் வெளியீடு: பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கான ரேண்டம் எண் வருகிற ஜூன் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது.
எம்பிபிஎஸ் படிப்பிற்கு 7454 பேர் விண்ணப்பித்துள்ளனர்: அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர 7454 பேர் விண்ணப்பித்துள்ளனர். பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்பில் சேர 11394 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15 கல்வி ஆண்டில் பிஇ படிப்பிற்கு 3 ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்சி வேளாண்மை படிப்பிற்கு ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்சி தோட்டக்கலை படிப்பிற்கு 75 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்துள்ளார்.
ரேண்டம் எண் எதற்கு?: ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெறும்போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கேள்வி எழும். அப்போது கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணிதப் பாடத்தை அடுத்ததாக இயற்பியல், வேதியல் பாடங்களின் மதிப்பெண்களும் பலருக்கு சமமாக இருக்கும்போது, பிளஸ்-2 நான்காவது பாட மதிப்பெண் பார்க்கப்படும். நான்காவது பாட மதிப்பெண்ணும் சமமாக இருக்கும்போது, பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படும். பிறந்த தேதியில் யார் மூத்தவரோ, அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பிறந்த தேதியும் சமமாக இருக்குமானால், ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) பயன்படுத்தப்படும். இது கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கப்படும் 10 இலக்க எண் ஆகும். இந்த ரேண்டம் எண் மதிப்பு அதிகம் உள்ளவர் கலந்தாய்வுக்கு முதலில் அழைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment