பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வை ஜூன் 27-ஆம் தேதி தொடங்கி 32 நாள்களில் முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான அட்டவணையையும் அண்ணா பல்கலைக்கழகம் www.annauniv.edutnea2014 இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. பொதுப் பிரிவு கலந்தாய்வின் முதல் நாளான ஜூன் 27-ஆம் தேதி கட்-ஆஃப் மதிப்பெண் 200 முதல் 198.75 கட்-ஆஃப் வரை பெற்றவர்கள் அழைக்கப்பட உள்ளனர்.
கடந்த ஆண்டு பொதுப் பிரிவு பி.இ. கலந்தாய்வு 37 நாள்கள் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:
முதல் நாள் கலந்தாய்வு மட்டும் காலை 9 மணிக்குத் தொடங்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு முடிக்கப்படும். 3 ஆயிரம் பேர் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்படுவர்.
அடுத்தடுத்த நாள்களில் 5 ஆயிரம் பேர் வீதம் அழைக்கப்படுவர். இரண்டாம் நாள் முதல் காலை 7.30 மணிக்கே கலந்தாய்வு தொடங்கப்பட்டு விடும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படும். குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமும் கலந்தாய்வு தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்படும். அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்களும் கலந்தாய்வு அட்டவணைப்படி, கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்றார். பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிந்த பின்னர், பிளஸ்-2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து உடனடி சிறப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
முன்னதாக விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 23, 24 ஆகிய இரு தேதிகளிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஜூன் 25-ஆம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
தொழில் பிரிவு மாணவர்களுக்கு...
பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 9-ஆம் தேதி முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை 10 நாள்கள் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு தேதி அட்டவணையும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment