Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 13 June 2014

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்திலிருந்து 109 பேர் தேர்ச்சி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வில் தமிழகத்திலிருந்து 109 பேர் தேர்ச்சியடைந்தனர்.
தமிழ் வழியில் தேர்வு எழுதிய ஜெயசீலன் இந்தத் தேர்வில் அகில இந்திய அளவில் 45-ஆவது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது இந்திய வருவாய்த் துறை அதிகாரியாக அவர் பணியாற்றி வருகிறார்.
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த இவர் அரசுப் பள்ளியில் படித்தவர். பி.எஸ்சி., விவசாயப் படிப்பும், எம்.ஏ. தமிழ் படிப்பும் முடித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றது தொடர்பாக அவர் கூறியது:
இந்தத் தேர்வை தமிழ் வழியில் எழுதி தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. சிவில் சர்வீசஸ் தேர்வில் சிந்தித்து எழுத வேண்டும் என்பதால் தமிழ் வழியில் எழுதியது உதவியாக இருந்தது.
தமிழ் வழியில் எழுதுவதற்கு கூடுதல் உழைப்பு தேவைப்படும் அவ்வளவுதான். மிகவும் சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்த என்னால் இந்தத் தேர்வில் வெற்றி பெற முடிந்துள்ளது. இந்தத் தேர்வை தமிழில் எழுதுவதை மாணவர்கள் பெருமையாகக் கருத வேண்டும் என்றார் அவர்.
இவரது தந்தை பழனிச்சாமி கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக உள்ளார். தாயார் பாண்டியம்மாள்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பார்வையற்ற பினோ ஜெபைன் என்கிற தேர்வர் இந்தத் தேர்வில் 343-ஆவது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் பி.ஏ., எம்.ஏ. படிப்புகளில் ஆங்கிலம் படித்துள்ளார்.
இப்போது வங்கியில் பணியாற்றி வருகிறேன். எனக்கு எந்தப் பொறுப்பை வழங்கினாலும் அதில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. வாழ்க்கையில் எதையும் தடையாகக் கருதாமல் தன்னம்பிக்கையுடன் உழைத்தால் சாதிக்கலாம் என்றார் பினோ ஜெபைன்.
இவருக்கு ஐ.ஏ.எஸ். பணி கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் இந்தத் தேர்வில் 1,122 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 180 பேர் ஐ.ஏ.எஸ். பணியிடங்களுக்கும், 32 பேர் ஐ.எப்.எஸ். பணியிடங்களுக்கும், 150 பேர் ஐ.பி.எஸ். பணியிடங்களுக்கும் தேர்வு பெற்றுள்ளனர்.
தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தேர்ச்சி சதவீதத்தில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இந்த ஆண்டு 9.8 சதவீதம் பேர் (109 பேர்) தமிழகத்திலிருந்து தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுகள் கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இப்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

No comments: