Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 28 May 2014

பி.எட். பதிவு செய்யாமல் ஆசிரியர் பணியை இழக்கும் முதுநிலை பட்டதாரிகள்?

இளநிலை பட்டத்துடன் பி.எட். முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு, முதுநிலைப் பட்டத்துடன் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மீண்டும் பி.எட். படிப்பை 2-ஆவது முறை பதிவு செய்யாமல் ஏராளமான முதுநிலைப் பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி முதல் தொடர்ந்து மேல் படிப்புகளை மாணவ, மாணவியர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்புகள் வரை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூடுதல் படிப்புகளாக பதிவுகளைச் செய்து வருவது வழக்கம்.
ஐடிஐ, பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகள், பொறியியல் பட்டம் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளை முடிக்கும் மாணவ, மாணவியர் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஊட்டியில் துவங்கி கன்னியாகுமரி வரை 16 மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாவட்டங்களுக்கு மதுரையில் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வருகிறது.
மேற்படி தொழில் படிப்புகளை இந்த அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுநிலைப் பட்டப்படிப்புகளையும் இந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதில் பட்டப்படிப்பு முடித்தவுடன் பி.எட். முடிக்கும் மாணவ, மாணவியர் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூடுதல் தகுதியாக அதைப் பதிவு செய்கின்றனர். அதன்பிறகு, இதே மாணவ, மாணவியர் எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுநிலைப் பட்டத்தைப் பெற்றவுடன், அந்தப் படிப்பை மட்டும் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு நிறுத்திக் கொள்கின்றனர். அதாவது, பி.எட். படிப்பை ஏற்கெனவே, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டதால், பதிவு மூப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என கருதி விடுகின்றனர்.
இதனால், பி.எட். படிப்புடன் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளை இழந்து வருவதாக, வேலைவாய்ப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், பலமுறை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமும், தொழில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் இது தொடர்பாக முதுநிலைப் பட்டம் பெறுவோருக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இளநிலைப் பட்டத்துடன் பி.எட். பதிவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தாலும், முதுநிலைப் பட்டம் பெற்றவுடன் மீண்டும் பி.எட். படிப்பை தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முதுநிலைப் பட்டத்துடன் கண்டிப்பாக இரண்டாவது பதிவு செய்ய வேண்டும். அப்போது தான், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் பரிந்துரையின்போது, தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்படும் என்றார்.

No comments: