Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 28 May 2014

ஜூன் 2-இல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள், சீருடை வழங்கப்படும்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள், சீருடை ஆகியவை பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2-ஆம் தேதி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான ஆய்வுக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது:
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை ஆகியவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளைக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இணை இயக்குநர் அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்துப் பள்ளிக் கட்டடங்களிலும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் மழை நீர் சேகரிப்பு திட்ட கட்டமைப்புகள் அமைக்கப்பட வேண்டும். ஜூன் 2-ஆவது வாரத்தை மழைநீர் சேகரிப்பு வாரமாக கடைப்பிடிக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை முழுமையாக நடைபெறுவதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
வரும் 2014-15-ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் டி.சபிதா, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, துணைச்செயலாளர் பழனிச்சாமி, பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments: