Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 10 May 2014

அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் உயர்வு: சரிவை சந்திக்கும் தனியார் பள்ளிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. அதே நேரம் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் கடந்த 2 ஆண்களாக சரிந்து வருகிறது.

 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் 87.9 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் 23-வது இடத்தில் இருந்து இந்த ஆண்டு 24-வது இடத்துக்கு பின்னோக்கி சென்றுள்ளது. இருந்த போதிலும் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு உயர்ந்துள்ளது மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் 118 அரசு மேல்நிலைப்பள்ளிகள் (நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் நல மேல்நிலைபள்ளிகள், சமூகநலத்துறை மேல்நிலைப்பள்ளிகள் உள்பட), 30 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 6 சுயநிதிப்பள்ளிகள், 154 மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 308 பள்ளிகள் உள்ளன.
 அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை பிளஸ் 2 தேச்சி சதவீதம் 2012-ல் 76.55 சதவீதமாகவும், 2013-ல் 74.7 சதவீதமாகவும் இருந்தது. இந்த ஆண்டு இது 6.2 சதவீதம் உயர்ந்து 80.9 சதவீதமாக உள்ளது. இதே போல் நகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 2012-ஆம் ஆண்டு 57.4 சதவீதமாகவும், 2013-ஆம் ஆண்டு அதை விட உயர்ந்து 66.8 சதவீதமாகவும் இருந்தது. இந்த ஆண்டு இது 17.1 சதவீதம் உயர்ந்து 83.95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் காலை, மாலை சிறப்பு வகுப்புகள், நன்னடத்தைக் கட்டுப்பாடுகள் ஆகிவற்றின் மூலம் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
 அதே நேரம் அரசு உதவிபெரும் தனியார் பள்ளிகள் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. கடந்த 2012-ல் 95.6 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம் 2013-ல் 90.9 சதவீதமாக குறைந்தது. 2014-ல் மேலும் 1.5 சதவீதம் தேர்ச்சி சதவீதம் குறைந்து 89.4 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதே போல் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி தேர்ச்சி சதவீதமும் கடந்த 3 ஆண்டுகளாக தேய்ந்து வருகிறது. கடந்த 2012-ல் 97.5 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம், 2013-ல் 97.02 சதவீதமாக குறைந்தது. இந்த ஆண்டு (2014) இது 96.36 சதவீதமாக குறைந்தது.
 தனியார் பள்ளிகளின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவது பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆசிரியர்களும், அதிகாரிகளும் அர்ப்பணிப்பு பணியுடன் அவர்களின் கடைமையை செய்தால் அடுத்த ஆண்டுகளில் இந்த தேர்ச்சி சதவீதம் மேலும் உயரும். இதன் மூலம் பெற்றோர்களிடையே அரசு பள்ளிகள் மீதுள்ள தவறான கருத்துக்கள் மறையும் என்பதில் ஐயமில்லை.

No comments: