Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 10 May 2014

அதிக சென்டம் எதிரொலி - எம்.பி.பி.எஸ்., கட் - ஆப் உயர்கிறது!

கடந்த ஆண்டை விட அதிகம் பேர், இயற்பியல், வேதியியல் பாடங்களில் சென்டம் பெற்றுள்ளதால், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான கட் - ஆப் 0.5 முதல் 1 சதவீதம் வரை உயரும் என தெரிகிறது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவத் தொழில் படிப்புகளுக்கான கட் - ஆப், உயிரியல் பாடத்தில் எடுக்கும் மதிப்பெண்ணில் 50 சதவீதமும், இயற்பியல், வேதியியல் பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்ணில் 25 சதவீதமும் கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த ஆண்டு இயற்பியல், வேதியியல் பாடத்தில் 200க்கு 200 பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில், இயற்பியலில் 36 பேரும், வேதியியலில் 1499 பேரும் சென்டம் எடுத்திருந்தனர். இந்த ஆண்டில் இயற்பியலில் 2710 பேரும், வேதியியலில் 1693 பேரும் சென்டம் எடுத்துள்ளனர். இதன் காரணமாக கட் - ஆப், கடந்த ஆண்டை விட, 0.5 முதல் 1 சதவீதம் வரை கூடும் என தெரிகிறது. கடந்த ஆண்டில், அரசு ஒதுக்கீட்டில், பொதுப் பிரிவினருக்கான கட் - ஆப் 198.25 ஆக இருந்தது. இந்த ஆண்டில் 199 ஆக உயரும் என தெரிகிறது.
பி.இ. கட் - ஆப் உயருமா?
பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில், 200க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனினும், பி.இ. கட் - ஆப் மதிப்பெண்ணில், பெரிய அளவிற்கு மாற்றம் வராது என கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
பி.இ. சேர்க்கைக்கு கணிதத்தில் 200க்கு பெறும் மதிப்பெண் 100க்கும், இயற்பியல், வேதியியல் பாடங்களில் பெறும் மதிப்பெண் தலா 50க்கும் கணக்கிடப்பட்டு, மொத்தம் 200க்கு ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் இயற்பியலில் 2710 பேரும், வேதியியலில் 1693 பேரும், கணிதத்தில் 3882 பேரும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட கூடுதல்.
இதனால் பி.இ. கட் - ஆப் மதிப்பெண் நிலைமை எப்படி இருக்கும் என்பது குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: டாப் 50 பொறியியல் கல்லுாரிகளில், 0.25 முதல் 0.5 மதிப்பெண் வரை கட் - ஆப் உயரலாம். ஆனால் இரண்டாம் தர, மூன்றாம் தர கல்லுாரிகளில் கட் - ஆப் குறையும்.
ஏனெனில், இந்த வகை கல்லுாரிகளில் காலி இடங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், போட்டி இருக்காது .எம்.பி.பி.எஸ்., மற்றும் மருத்துவம் சார்ந்த துணை படிப்புகள், உயிரியல் சார்ந்த படிப்புகள், கலை அறிவியல் படிப்புகள், வேளாண் படிப்புகள் ஆகியவற்றின் மீதுதான் மாணவர்கள் கவனம் இருக்கிறது. எனவே, பொறியியல் சேர்க்கையில், டாப் கல்லுாரிகளில் மட்டும்தான் போட்டி இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments: