இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு வெறும் 9,000 பேர் தான் இந்த படிப்பில் சேர்ந்தனர். இதனால், இந்த ஆண்டு ஆசிரியர் பயிற்சி இடங்கள் பெரிய அளவிற்கு "போணி" ஆகுமா என, தெரியவில்லை.
மோகம் குறைந்துவிட்டது
பத்து ஆண்டுகளுக்கு முன் வரை "காஸ்ட்லி"யான படிப்பாக ஆசிரியர் பயிற்சி படிப்பு இருந்தது. தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 3 லட்சம் ரூபாய் வரை இடங்களை விற்றனர். அந்தளவிற்கு, ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர முட்டி மோதினர். கடந்த ஐந்து ஆண்டுகளில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையிலான பணி நியமனம் மாறி, மாநில பதிவு மூப்பாக மாறியது. தற்போது, ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயமும் வந்துவிட்டது. முக்கியமாக, அரசு ஆரம்ப பள்ளிகளில் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. இடைநிலை ஆசிரியர் நியமனம் மிக குறைவாக நடக்கிறது. இதனால், இந்த படிப்பு மீது மாணவர் மத்தியில் மோகம் முற்றிலும் குறைந்துவிட்டது.
50 பள்ளிகள் மூடல்
இதனால், ஆண்டிற்கு 10 ஆயிரம் பேர் தான் ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்கின்றனர். "போணி" ஆகாத தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 50க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதுபோன்ற சூழலில், நடப்பு கல்வி ஆண்டு சேர்க்கைக்காக வரும் 14ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை முதன்மை கல்வி அலுவலகங்களில் விண்ணப்பம் வழங்கப்படும் என, இயக்குனரகம் அறிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் 37 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 42, தனியார் பள்ளிகள் 400ம் உள்ளன. அனைத்துப் பள்ளிகளிலும் சேர்த்து, அரசு ஒதுக்கீட்டின் கீழ் 6,000 இடங்கள் உள்ளன. மொத்த இடங்கள் 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளன. இந்த இடங்கள், எந்தளவிற்கு "போணி" ஆகும் என, தெரியவில்லை.
இடம் கிடைக்க வாய்ப்பு
கடந்த ஆண்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்திலும் சேர்த்து வெறும் 9,000 மாணவர்கள் தான் ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்ந்தனர். இதில், அரசு பள்ளிகளில் 2,100 பேர் சேர்ந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சேர்க்கை குறையுமா, அதிகரிக்குமா என தெரியவில்லை. எனினும், சேரும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தாராளமாக இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment