Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 8 April 2014

கட்டணம் கட்டாத மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு: தனியார் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டம்


கல்விக் கட்டணத்தை செலுத்தாத மாணவர்கள் தேர்வு எழுத தனியார் பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததால், பள்ளி வளாகத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கல்விக்கட்டணக்குழு கட்டணத்தை குறைவாக நிர்ணயம் செய்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. பின்னர் சென்னை உயர்நீதிமன்ற புதியதாக கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்யுமாறு கல்விக்கட்டணக் குழுவிற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து பள்ளி நிர்வாகம், புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்து கல்வி கட்டணக்குழு அனுமதி பெற்றது. புதிய கல்வி கட்டணத்தை கட்டுமாறு மாணவர்களின் பெற்றோக்கு பள்ளி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் தற்போது முழு ஆண்டு தேர்வு தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 610 மாணவ, மாணவியர்கள் கல்விக்கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதி மறுத்து பள்ளி வளாகத்தில் ஒருபகுதியில் அமர வைத்தது. இதனையறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டு கட்டண உயர்வு கூடாது என வலியுறுத்தி கல்வி கட்டணக்குழுவினரிடம் மேல்முறையீடு செய்துள்ளோம். எனவே மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறிந்த சிதம்பரம் வட்டாட்சியர் எம்.விஜயா, டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆய்வாளர் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு ஏற்படவில்லை. கல்விக்கட்டணம் கட்டினால்தான் பள்ளியை நடத்தமுடியும். அப்போதுதான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments: