புதிய கல்லூரி தொடங்குவதற்கோ அல்லது மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கோ இணைப்பு கல்லூரிகளுக்கு ஓராண்டு அனுமதி வழங்க வேண்டாம் என தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இதனால், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கடந்த ஆண்டைப் போல் 1.75 லட்சம் இடங்கள் மட்டுமே இருக்கும்.
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகளும் யுஜிசி-யின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.
இதனைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை யுஜிசி இறுதி செய்து வெளியிட்டது. ஆனால், இதற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு கால தாமதம் செய்து வந்தது.
இறுதியாக கடந்த மார்ச் 13-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற யுஜிசி அவசரக் கூட்டத்தில், பொறியியல் கல்லூரிகளுக்கான யுஜிசி வழிகாட்டுதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த ஒப்புதல் மூலம், பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகள் யுஜிசி-யின் கீழ் அதிகாரப்பூர்வமாக வந்தன.
ஆனால், இந்த வழிகாட்டுதல் இன்னும் மத்திய அரசிதழில் வெளியிடப்படவில்லை. அவ்வாறு அரசிதழில் வெளியிட்டப் பிறகுதான், இந்த வழிகாட்டுதலை தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் பின்பற்ற முடியும்.
இதன் காரணமாக புதிய பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறுவதை நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் தவிர்த்து வந்தன. அண்ணா பல்கலைக்கழகமும் புதிய பொறியியல் கல்லூரி தொடங்க அனுமதிக்கக் கோரி வந்த 6 விண்ணப்பங்களை திருப்பியனுப்பியது.
இப்போது இயங்கி வரும் கல்லூரிகளில் உள்ள பொறியியல் இடங்களை உயர்த்திக் கொள்வதற்கான விண்ணப்பங்களை மட்டும் அண்ணா பல்கலைக்கழகம் பெற்று வந்தது.
இந்த குழப்பம் காரணமாக, 2014-15 கல்வியாண்டில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படுமா, பொறியியல் படிப்பு இடங்களின் எண்ணிக்கை உயருமா என்ற சந்தேகம் நீடித்து வந்தது.
இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யுஜிசி வியாழக்கிழமை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், புதிய பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கோ அல்லது இயங்கி வரும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதற்குமான விண்ணப்பங்கள் எதுவும் ஓராண்டுக்குப் பெற வேண்டாம்.
பிற வழக்கமான நடைமுறைகளை பொறியியல் கல்லூரிகளுக்கான யுஜிசி வழிகாட்டுதல் 2014-ன் படி பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ளலாம் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம், 2014-15 கல்வியாண்டில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படாது என்பதோடு, பொறியியல் படிப்பு இடங்களும் உயராது என்பது உறுதியாகியுள்ளது.
இது குறித்து யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் கூறியது:
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதிய கல்லூரிகள் அனுமதி வழங்குவது, இடங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான அனுமதி ஆகியவை ஏப்ரல் 31-ஆம் தேதிக்குள் வழங்கிட வேண்டும். ஆனால் வழிகாட்டுதல் அரசிதழில் இன்னும் வெளியிடப்படாததால் ஏப்ரல் 31-ஆம் தேதிக்குள் இந்த அனுமதிகளை வழங்குவது சாத்தியமில்லை. இதன் காரணமாக ஒரு ஆண்டு காலத்துக்கு இந்த அனுமதிகளை வழங்குவதை தாற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
No comments:
Post a Comment