Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 3 April 2014

கருணை மதிப்பெண் போடுவது மிகவும் ரகசியம்: தேர்வுத்துறை இயக்குனர்

 "தவறான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்குவதை வெளிப்படையாக அறிவிக்க முடியாது; அது, மிகவும் ரகசியம்" என தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 கணித தேர்வில், ஆறு மதிப்பெண் கேள்வி ஒன்று தவறாக வெளியானது. "இந்த கேள்விக்கு, விடை அளிக்க மாணவர்கள் முயற்சி செய்திருந்தால், அதற்குரிய ஆறு மதிப்பெண் முழுமையாக வழங்கப்படும்" என தேர்வு நடந்த அன்றே இயக்குனர் அறிவித்திருந்தார்.

ஆனால் தமிழ்வழி பிரிவு கேள்வித்தாளில், ஒரு மதிப்பெண் கேள்விகள் இரண்டு தவறாகவும், ஆங்கில வழி மாணவர்களுக்கு, ஆறு மதிப்பெண் கேள்வியுடன், ஒரு மதிப்பெண் கேள்வி ஒன்றும் தவறாக கேட்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்வழி பிரிவு மாணவர்களுக்கு எட்டு மதிப்பெண்ணும், ஆங்கிலவழி பிரிவு மாணவர்களுக்கு ஏழு மதிப்பெண்ணும் வழங்க, தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதே போல், உயிரியல் தேர்வில், மூன்று, ஒரு மதிப்பெண் கேள்விகள் தவறாக கேட்கப்பட்டன. இதற்கும் மதிப்பெண் வழங்கப்படும் என, தெரிகிறது. இதுகுறித்து, இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
தவறான கேள்விக்கு மதிப்பெண் அளிக்க வேண்டும் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடமோ, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடமோ, யாரும் கேள்வி கேட்க முடியுமா... தவறான கேள்வி கேட்கப்பட்டு இருந்தால், பாட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தி உரிய மதிப்பெண் அளிக்கப்படும். ஆனால், அதுகுறித்து முன்கூட்டியே அறிவிப்பது கிடையாது.
தமிழக அரசின் தேர்வுத் துறையிடம் மட்டும், கேள்வி கேட்பது வியப்பாக உள்ளது. கருணை மதிப்பெண் போடுவது, தேர்வுத் துறைக்கும் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள ரகசிய விஷயம். இதை வெளிப்படையாக சொல்ல முடியாது; அவ்வாறு சொல்ல வேண்டும் என விதி எதுவும் இல்லை. இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார்.
பொது தேர்வில், தேர்ச்சி சதவிகிதம் மிகவும் குறைவாக வந்தால், அரசியல் ரீதியாகவும், பொதுமக்கள் தரப்பில் இருந்தும், கல்வித்துறை மீது கடுமையாக விமர்சனம் எழுந்துவிடும். இதை தவிர்க்க, ஒரு மதிப்பெண் முதல், ஐந்து மதிப்பெண் வரையான வித்தியாசத்தில் தோல்வி அடையும் மாணவ, மாணவியருக்கு, கருணை மதிப்பெண் வழங்கி, பாஸ் செய்ய வைக்கும் செயல் எந்த கட்சி ஆட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து கால கட்டங்களிலும் நடந்து வருவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கருணை மதிப்பெண் போடுவது ரகசியம் என்றும், அதை வெளியில் சொல்ல முடியாது என்றும் தேர்வுத்துறை இயக்குனர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

No comments: