Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 1 April 2014

ஏழைக் குழந்தைகளுக்காக இலவச மாலை நேர வகுப்புகள்!

அடிப்படை வசதிகூட இல்லாத குக்கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வியை இலவசமாக அளிக்கிறது சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம்.
மாணவர்களால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லையென்றால், மாணவர்களைத் தேடி பள்ளிகள் செல்ல வேண்டும்’ என்கிற தாரக மந்திரத்தின்கீழ் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச மாலை நேர வகுப்புகளை நடத்துகிறது சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம். 2006-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளிகளுக்கென சொந்தமாக இடம் இல்லை. தனிக் கட்டடம் இல்லை. கிராமங்களிலுள்ள சமுதாயக் கூடங்கள், கோயில்கள், மரத்தடிகளிலேயே பெரும்பாலான பள்ளிகள் நடக்கின்றன.


“காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிக்கும் நோக்கத்துடன் இந்த இலவசவகுப்புகளை நடத்தி வருகிறோம். ஒரு சில கிராமங்களில் அரசுப் பள்ளிகள் உள்ளன. ஒரு சில கிராமங்களில் பள்ளிகளே இல்லாத நிலையும் உள்ளது.  இக்கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலான குழந்தைகள் காலையில் வேலைக்குச் சென்று விடுவார்கள் அல்லது பெற்றோருக்கு உதவியாக இருப்பார்கள். இவர்களால் வழக்கமான பள்ளிக்குச் சென்று கல்வி கற்பது  சாத்தியமில்லாததாக இருக்கும். பெரும்பாலான குழந்தைகள் மூன்று அல்லது நான்காம் வகுப்புடன் படிப்பை இடையில் நிறுத்தியிருப்பார்கள்.

இக்குழந்தைகளுக்கு மாலை 5.30-லிருந்து இரவு 8.30 மணி வகுப்புகளை நடத்தி வருகிறோம். காலையில் பள்ளிக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் கூட மாலையில் இந்த வகுப்புகளுக்கு வந்து பாடங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்.இந்த வகுப்புகளுக்குத் தேவையான கரும்பலகை, மாணவர்கள் அமர்ந்து படிக்க பாய்கள், புத்தகங்கள் போன்றவற்றை நாங்கள் வழங்குகிறோம். அந்த கிராமத்திலிருக்கும் படித்த பெண்களையே இப்பள்ளியின் ஆசிரியர்களாக நியமித்திருக்கிறோம். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்த்து மொத்தம் 580 இடங்களில் உள்ள எங்களது பள்ளிகளில் 22 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இத்திட்டத்துக்காக  ஆண்டுக்கு 1.50 கோடி ரூபாய் செலவாகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் அளிக்கும் நன்கொடை மூலம் செலவுகளைச் சமாளிக்கிறோம்” என்கிறார்  சங்கத்தின் செயல் இயக்குநர் கிருஷ்ணமாச்சாரி.

“இந்த வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்று ஐந்து வகையான பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறோம். அத்துடன் பண்பாட்டுக் கல்வியையும் பயிற்றுவிக்கிறோம். மாணவர்கள் பள்ளிக்கு வந்தவுடன் ஸ்லோகம் சொல்ல வேண்டும். நம் பண்டைய  இதிகாசங்கள், பாரதப் பண்பாடு, கயலாசாரம் போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கிறோம். இங்கு படிக்கும் மாணவர்கள் தவறின்றிப் படிக்கவும், எழுதவும் பயிற்சியளிக்கிறோம். ஒழுக்கம், பண்பாடு போன்றவற்றுடன், சமூகத்தில் கலந்து பழகுவதற்குத் தேவையான பழக்கவழக்கங்களையும் கற்பிக்கிறோம். இதனால், மற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட இங்கு படிக்கும் மாணவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடையவர்களாய், தைரியமானவர்களாய் இருக்கிறார்கள்” என்று பெருமிதப்படுகிறார் அவர்.

“கிராமப்புறங்களில் உள்ள படித்த பெண்களின் திறமையைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு ஓய்வு பெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சியளிக்கிறோம். பயிற்சி பெற்ற அப்பெண்களை ஆசிரியர்களாக நியமித்த பிறகு, அவர்களின் செயல்பாடுகள் பற்றியும், மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை பற்றியும் இந்த ஆலோசகர்கள் அவ்வவ்போது ஆராய்கிறார்கள். ஆசிரியர்களின் செயல்பாடு திருப்தியளிக்காத பட்சத்தில், வேறு ஆசிரியர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்கிறார்கள்.  மாணவர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து ஆசிரியர்கள் அறிக்கை அளிக்கிறார்கள்” என்று விளக்குகிறார் திட்ட மேலாளர் ஜனார்த்தனன்.

“மாணவர்களின் நலனில் தனிப்பட்ட முறையில் அக்கறையும், கற்பிப்பதில் அதீத ஈடுபாடும் கொண்ட ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால், இங்கு படிக்கும் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன், கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் படித்து வருகிறார்கள். வேறு எந்தப் பள்ளியிலும் இதுபோல நீங்கள் பார்க்க முடியாது.

எங்களின் கல்விப் பணியை மேலும் சில மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கத் திட்டமிட்டுள்ளோம். அத்துடன் 8 முதல் 10 வகுப்பு வரை படித்துவிட்டு, படிப்பை பாதியில் நிறுத்திவிட்ட மாணவர்களுக்கு தொழில் பயிற்சியும் அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். மின் சாதனங்களைப் பழுது பார்த்தல், தச்சு வேலை, பிளம்பிங் போன்ற துறைகளில் அவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்கிற கிருஷ்ணமாச்சாரி, தங்களது  சங்கம் சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான பரிசை, தமிழக ஆளுநரிமிருந்து பெற்றது குறித்து பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

No comments: