வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களை பொறியியல் படிப்புகளில் சேர்ப்பதற்கான கலந்தாய்வு ஜூன் 25-ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான பி.இ. இடங்கள் மற்றும் பல்கலைக்கழகத் துறைகளில் உள்ள பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பி.இ. இடங்களில் குறிப்பிட்ட சதவீதம் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கும், வெளிநாட்டு மாணவர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. இப்போது இந்த வெளிநாடு வாழ் மாணவர்களுக்கான திட்டத்தின் கீழ் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் 830 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதுபோல், 2014-15-ஆம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். மற்றும் எம்.இ., எம்.டெக். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுகளுக்கு வெளிநாட்டு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விவரங்கள் www.annauniv.edu இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 16-ஆம் தேதிக்குள் தபால் மூலம் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். இதில் வெளிநாட்டு மாணவர்களுக்கு (எஃப்.என்.) ஜூன் 25-ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும்.
வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கும், அரபு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் குழந்தைகளுக்கும் ஜூன் 26, 27-ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment