Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 4 March 2014

SSLC: மாணவர்கள் இப்போது படித்தாலும் நிச்சயம் பாஸ்!

எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 26-ஆம் தேதி தொடங்குகிறது. இத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயனுள்ள யோசனைகள் இதோ...
பிளஸ் டூ தேர்வு எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியமானது எஸ்எஸ்எல்சி தேர்வு. இத்தேர்வில் பெறும் மதிப்பெண்களைப் பொருத்துதான், பிளஸ் ஒன் வகுப்பில் விரும்பிய பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய முடியும் அல்லது பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்து தொழில்நுட்ப டிப்ளமோ படிப்புகளில் சேர முடியும். எனவே, இத்தேர்வை எழுத நன்கு தயாராக வேண்டியது அவசியம். ஏற்கெனவே பாடங்களை நன்கு படித்த மாணவர்கள், பாடங்களை மீண்டும் படித்து நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
பல மாணவர்களுக்கு, தேர்வு நெருங்க நெருங்க பதற்றம் தொற்றிக் கொள்ளும். பாடங்களை நன்கு படித்திருந்தாலே, மாணவர்களிடம் தன்னம்பிக்கை ஏற்பட்டு விடும். படிப்பதில் கவனம் செலுத்தாத மாணவர்கள் இப்போதாவது படிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் தேர்வில் தேர்ச்சி பெற முடியும். டியூஷனில் போய் படித்தாலும் வீட்டிலும் படிக்க வேண்டும். அதற்காக வீட்டில் எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பது போல காட்டிக்கொள்ள வேண்டியதில்லை. தேர்வு நேரத்தில் படிப்புக்கு ஓய்வு கொடுக்கும் நேரத்தில் சிறிது நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். அதற்காக, நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பது உங்களது படிப்புக் கவனத்தை  சிதறடித்து விடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலும், தனி அறையில் அமர்ந்து படிக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்கக் கூடாது. அமைதியான சூழ்நிலையில் மனதை ஒருநிலைப்படுத்திப் படிக்க வேண்டும். மனப்பாடப் பாடல்களை மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது. தவறு இல்லாமல் எழுதியும் பார்க்க வேண்டும். சூத்திரங்கள், சமன்பாடுகள் போன்றவற்றை குறிப்புகளாக எடுத்து வைத்துக்கொண்டு அவ்வப்போது ஞாபகப்படுத்திப் பார்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து இடைவிடாமல் படித்துக் கொண்டிருப்பதைவிட, சிறு சிறு இடைவெளிவிட்டுப் படிப்பது நல்லது. பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், கையேடுகள் போன்றவற்றை ஒரே இடத்தில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஞாபகமறதியாக எங்காவது வைத்துவிட்டு அதைத் தேடும் நிலை ஏற்படலாம். கேள்வித்தாள் அவுட் வதந்திகளை நம்பாதீர்கள்!
எந்தெந்தப் பாடங்களை எப்போது படிக்கலாம் என்பது குறித்து திட்டம் வகுத்துக்கொண்டு அதன்படி படிக்க வேண்டும். அப்போதுதான், குறிப்பிட்ட பாடங்களை திருப்பிப் படிக்க நேரம் கிடைக்கவில்லையே என்ற நிலை ஏற்படாது. பாடங்களில் சந்தேகங்கள் ஏற்பட்டால் அது குறித்து சக மாணவர்களிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ கேட்டுத்  தெளிவு பெற வேண்டும். இரவு நேரத்தில் கண் விழித்துப் படித்தாலும்கூட, தினந்தோறும் குறிப்பிட்ட நேரத் தூக்கம் வேண்டும். தூங்கி எழுந்து காலை நேரத்தில் படிக்கும்போது பாடங்கள் மனதில் தங்கும். இரவு நேரத்தில் படித்துப் பழக்கப்பட்டவர்கள் அந்த நேரத்திலேயே படிப்பைத் தொடரலாம்.
தேர்வுக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக, இதுவரை படிக்காமல் இருக்கிற பாடங்களை புதிதாக படிக்கத் தொடங்கக் கூடாது. தேர்வுக்கு முந்தைய நாளில் நீண்ட நேரம் கண் விழித்துப் படிக்க வேண்டாம். தேர்வுக்கு முந்தைய நாளிலேயே ஹால் டிக்கெட், பேனா, ஜாமெட்ரி பாக்ஸ் போன்ற பொருள்களை தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தேர்வு நடைபெறும் இடத்துக்கு, தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்று விடுவது நல்லது.
தேர்வுக்குச் செல்லும் முன்னதாக காலை நேர உணவை வயிறு முட்ட சாப்பிட வேண்டாம். அளவோடு  சாப்பிடவும். அதற்காக, காலை நேர உணவைச் சாப்பிடாமல் தேர்வு அறைக்குச் செல்வதும் நல்லதல்ல. உடல்நிலை சரியில்லை என்றால் மருந்து சாப்பிட்டுவிட்டு தேர்வுக்குச் செல்லலாம்.
தேர்வுக்கு நன்றாகத் தயாராகவில்லை, சில பாடங்களைப் படிக்காமல் விட்டு விட்டேன், அதனால் ஃபெயிலாகி விடுவேன் என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களை விட்டு விட்டு, தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளவும். தேர்வு அறையில் நுழையும் வரை பாடங்களைப் படித்துக் கொடிருப்பதை விட்டுவிட்டு, அமைதியாக மனதை ஒரு நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். சில நேரங்களில், சக மாணவர்கள் பாடம் குறித்து ஏதாவது உங்களைக் குழப்பி விடக்கூடும். எனவே, அருகில் இருக்கும் மாணவர்களுடன் வெட்டி அரட்டைப் பேச்சும் தேவையில்லை.
தேர்வு அறையில் உங்களுக்கான கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதும், கேள்வித்தாளை முழுவதும் படித்துப் பார்த்துவிட்டு நன்றாகத் தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதத் தொடங்குங்கள். தெரியாத கேள்விகள் இருந்தால், தெரிந்த கேள்விகளுக்கு விடை அளித்து விட்டு, பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஒரு கேள்விக்கு விடையளிக்கும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ள வேண்டாம். அதனால், அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்க நேரமில்லாமல் போகலாம். கேள்விக்கு விடையளிக்கும்போது விடைத்தாளில் கேள்வி எண்ணை சரியாக எழுத மறந்து விடாதீர்கள். தேர்வுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டு, மீதமுள்ள நேரத்தை எழுதி விடைகளை சரிபார்க்க பயன்படுத்திக் கொள்ளவும். எழுத விடுபட்ட வினாக்களுக்கு விடையளிக்கவும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
மாணவர்கள் தங்களது படிப்பை மட்டுமே நம்பி தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். காப்பியடித்தல், பிட் வைத்திருந்து எழுதுதல், ஆள் மாறாட்டம் போன்ற தேர்வுக்கூட முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்பதை மாணவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். வெற்றிக்குக் குறுக்கு வழிகள் இல்லை. தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்!

No comments: