தனியார் சுயநிதி மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட இருக்கிறது. இதற்கான உத்தேச கட்டணத்தை தெரிவிக்குமாறு கல்லூரி நிர்வாகங்களுக்கு நீதிபதி என். வி. பாலசுப்பிரமணியன் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், 12 தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் (நிகர்நிலை பல் கலைக்கழக கல்லூரிகள் நீங்கலாக) உள்ளன. அதேபோல், ஒரேயொரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும், 28 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளும் இருக்கின்றன.தனியார் மருத்துவ,பல் மருத்துவ கல்லூரிகள் உள்பட தொழில்கல்வி கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் நீதிபதி என்.வி.பால சுப்பிரமணியன் கமிட்டியால் நிர்ணயிக்கப்படுகிறது. சுயநிதி மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரையில், கடந்த ஆண்டு நிலவரப்படி, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு கல்லூரிகளுக்குத் தக்கவாறு ரூ.2.30 லட்சம் முதல் ரூ.2.80 லட்சம் வரையும், பி.டி.எஸ். படிப்புக்கு ரூ.1 லட்சமும் கல்விக் கட்டணமாக இருந்து வருகிறது.
புதிய கல்விக் கட்டணம் நிர்ணயம்
இந்த நிலையில், வரும் கல்வி ஆண்டு (2014-15) மற்றும் 2015-16, 2016-17 ஆகிய அடுத்தடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கு தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி முடிவுசெய்துள்ளது. பார்மசி, நர்சிங், துணைநிலை மருத்துவ கல்லூரிகளும் இதில் அடங்கும்.
மேற்குறிப்பிட்ட 3 கல்வி ஆண்டுகளுக்கு தங்களின் உத்தேச கல்விக் கட்டணத்தை மார்ச் 20-ம் தேதிக்குள் தெரிவிக்கு மாறு சுயநிதி மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளுக்கு நீதிபதி பாலசுப்பிரணியன் கமிட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் தனித்தனியே தகவல் அனுப்பப்பட்டு இருக் கிறது.
தனியார் கல்லூரிகள் தெரிவிக்கும் உத்தேச கட்டண விகிதங்களை ஆய்வுசெய்து அதன்பிறகு ஒவ்வொரு கல்லூரிக்கும் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
No comments:
Post a Comment