பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாளில் இடம் பெற்றுள்ள கேள்விக்கு இந்து முன்னணி அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்புத் தேர்வு தமிழ் முதல் தாளுடன் புதன்கிழமை (மார்ச் 26) தொடங்கியது. இந்தத் தேர்வில் ஒரு மதிப்பெண் பிரிவான பகுதி 1-இல் 5-வது கேள்வியாக -பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல்... - எனும் கேள்வி இடம் பெற்றிருந்தது. இதற்கு 1. பகவத்கீதை 2. நன்னூல் 3. பைபிள் ஆகிய பதில்கள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து மாணவர்கள் சரியான பதிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்தக் கேள்விக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியின் சார்பில் அதன் சென்னை மாநகரப் பொதுச் செயலாளர் ஏ.டி.இளங்கோவன் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வியாழக்கிழமை மனு அளித்தார்.
அந்த மனுவில், இந்தக் கேள்வியைத் தயாரித்து வழங்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். அதோடு, இந்தக் கேள்விக்கான 3 பதில்களுக்குமே மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இந்தக் கேள்வி குறித்து ஆசிரியர்களிடம் விசாரித்ததில் அவர்கள் கூறியது:
இந்தக் கேள்வி உரைநடைப் பகுதியில் உள்ள -காந்தியம்- என்ற பாடத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. இந்தப் பாடத்தில், காந்தியைப் பல்வேறு வகையில் பாதித்த நூல்கள், ஆளுமைகளைப் பற்றி பேசும்போது பகவத் கீதை மற்றும் இயேசுநாதர் குறித்த பகுதிகள் வருகின்றன.
இந்தப் பகுதிக்கான கேள்விகள் புத்தகத்தின் 185-வது பக்கத்தில் இடம் பெற்றுள்ளன. அதில் 2 (ஆ) வினாவில், பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல்...'' எனக் குறிப்பிட்டு, அதற்கு விடைகளாக 1. பகவத் கீதை 2. நன்னூல் 3. பைபிள் என வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான விடையாக பைபிள் வருகிறது. புத்தகத்தில் இருந்து எடுத்தே பொதுத்தேர்வில் இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இந்தப் புகார் தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment