வெளிநாட்டில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புவோர் எழுத வேண்டிய தகுதித் திறனாய்வுத் தேர்வுகள் குறித்து பார்த்தோம். அதற்கு தயாராவது எப்படி?
பொறியியல் படித்தவர்கள் அமெரிக்காவில் பட்ட மேற்படிப்பாக மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் (எம்.எஸ்) படிக்கலாம். அதுதான் இந்தியாவில் எம்.இ., எம்.டெக். படிப்புகளாக உள்ளன. அமெரிக்காவில் எம்.எஸ். படிக்க விரும்புவோர் பொறியியல் பட்டப் படிப்பின் 2-ம் ஆண்டில் இருந்து தயாராக வேண்டும். GRE, TOEFL ஆகிய தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டும் போதாது; பொறியியலில் பெற்ற மதிப்பெண்ணின் சராசரியை வைத்தும், நீங்கள் எழுதும் SOP கட்டுரையை (ஸ்டேட்மென்ட் ஆஃப் பர்பஸ்) வைத்தும்தான் தேர்வு செய்யப்படுவார்கள்.
அமெரிக்காவில் படிப்பதற்கான காரணம், இந்த படிப்பை தேர்வு செய்ததற்கான காரணம், பொறியியலில் தங்களுக்கு இருக்கும் தனித் திறமைகள் உள்ளிட்டவற்றை SOP கட்டுரையில் எழுத வேண்டும். இந்த கட்டுரையில் பெறும் மதிப்பெண்ணை வைத்தே சிறந்த கல்லூரிகளில் சேர்க்கையும், அவர்களுக்கான கல்வி நிதி உதவியும் கிடைக்கும்.
பொறியியல் படிக்கும் மாணவர்கள் எந்த துறை சார்ந்து பட்ட மேற்படிப்பு படிக்கப் போகிறோம் என்பதை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். குறி்ப்பாக, பொறியியல் படிக்கும்போது, கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் பட்ட மேற்படிப்பு படிக்க விரும்பினால், புராஜக்ட், மினி புராஜக்ட், அது சம்பந்தமான பேப்பர் ஒர்க் ஆகியவற்றை தயார் செய்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான், விரும்பும் பட்ட மேற்படிப்பில் சேர முடியும். வெளிநாடு செல்ல எழுதும் திறனாய்வுத் தகுதித் தேர்வான GRE தேர்வு குவான்டிட்டி தேர்வு, வெர்பல் அனலிடிக்ஸ், ரைட்டிங் என 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
இதில் குவான்டிட்டி, வெர்பல் அனலிடிக்ஸ் தேர்வுகளுக்கு தலா 170 மதிப்பெண் வீதம் மொத்தம் 340 மதிப்பெண். தேர்வில் 320 மதிப்பெண்கள் பெற்றால்தான் சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்கும். இத்தேர்வுக்காக, பொறியியல் படிக்கும்போதிருந்தே தினமும் ஒரு மணி நேரம் படிக்க வேண்டும்.
அமெரிக்காவில் பட்டமேற்படிப்பு படிக்க விண்ணப்பிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பிருந்தே அதற்கான பணிகளை ஆரம்பிக்க வேண்டும். உதாரணத்துக்கு, அமெரிக்காவில் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடக்கிறது என்றால், 2015-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு முன்னதாக 2014-ம் ஆண்டு செப்டம்பரில் GRE தேர்வு எழுதி, அதில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எனவே, வெளிநாட்டில் பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புவோர் முன்கூட்டியே திட்டமிடுதல் மிக அவசியம்.
No comments:
Post a Comment