பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளுக்கு சர்வதேச அளவில் புகழ் பெற்ற சென்னை ஐஐடியில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் நேரடியாக எம்ஏ படிப்பில் சேர்ந்து படிக்கலாம். பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பிளஸ் டூ தேர்வு எழுத தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி) கல்வி நிலையத்தில் வளர்ச்சி மேம்பாடு (Development Studies) மற்றும் ஆங்கிலம் (English Studies) ஆகிய பாடப்பிரிவுகளில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்ஏ படிப்பைப் படிக்கலாம்.
வளர்ச்சி மேம்பாடு மற்றும் ஆங்கிலப் படிப்புகளில் மாணவர்களுக்கு மக்கள், சமூகம் மற்றும் வாழ்க்கை முறை குறித்த விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதுடன் பல்வேறு துறைகளுடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. இதன் மூலம் கலைப் புலப்பாடப்பிரிவுகளில் மாணவர்கள் நிபுணத்துவம் பெறலாம்.
இன்றைக்கு சமூக வளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்த துறை. இதனை கருத்தில் கொண்டு பல்வேறு பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் சமூக வளர்ச்சி குறித்த ஆராய்ச்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இதனை கவனத்தில் கொண்டு வளர்ச்சி மேம்பாட்டுப் படிப்பில் பொருளாதார மேம்பாடு, வர்த்தக சந்தை அமைப்புகள், உலகமயமாக்கல், சமநிலையின்மை, ஏழ்மை, பாலின சமநிலை, சுற்றுச்சூழல், மோதல் நிலைப்பாடு, புதிய சமூக இயக்கங்கள், அரசியல் மற்றும் நிறுவனங்களின் நிலை எனப் பல்வேறு பரிமாணங்கள் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகின்றன. இதன்மூலம் பொருளாதாரம், நகரமயமாக்கல், பாலின ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள், நவீன அரசியல் தத்துவங்கள் மற்றும் சமூகக் கோட்பாடுகளை எளிதாக அறிந்துகொள்ள முடியும். வளர்ச்சி மேம்பாட்டுப் படிப்பை முடித்தவர்களுக்கு அரசு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.
ஆங்கிலப் படிப்பில் ஆங்கில இலக்கியம் மற்றும் மொழி ஆய்வுகள் குறித்து விரிவாகக் கற்றுத்தரப்படுகின்றன. தற்கால ஆங்கிலக் கோட்பாடுகள், கலாசார ஆய்வுகள், ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்கா மற்றும் இதர பகுதிகளின் மொழி அமைப்புகள், இலக்கியங்கள், பல்வேறு காலகட்ட எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், வரலாற்று நிபுணர்கள் குறித்த பாடங்களும் உண்டு. அத்துடன், பொருளாதாரம், சமூகவியல், வரலாறு மற்றும் தத்துவம் குறித்தும் படிக்கலாம். இந்தப் படிப்பைப் படிப்பவர்கள் கல்வி நிறுவனங்களிலும், ஊடகங்கள் மற்றும் மொழி ஆய்வு நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.
இந்த இரண்டு படிப்புகளில் சேரும் அனைத்து மாணவர்களும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு சேர்ந்து படிப்பார்கள். அதன் பிறகு, அவர்களது கல்வித் தரம் மற்றும் விருப்ப அடிப்படையில் சிறப்புப் பாடப்பிரிவுகளை எடுத்துப் படிப்பார்கள். அத்துடன், அறிவியல், மேலாண்மை உள்ளிட்ட பாடங்களை விருப்பப் பாடங்களாகத் தேர்வு செய்து படிக்கவும் வாய்ப்பு அளிக்கப்படும். இதர பொறியியல் துறையில் உள்ளவர்களுடன் சேர்ந்து ஆராய்ச்சியையும் மேற்கொள்ளலாம். மேலும், இந்திய பொருளாதாரம், இலக்கியம், தத்துவம், கலாசாரம், சமூகம் மற்றும் பொது நிர்வாகம் போன்ற பாடங்களையும், அத்துடன் ஜெர்மன், பிரெஞ்ச், சீனம் போன்ற வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படும்.
12-ஆம் வகுப்பு வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் தற்போது பிளஸ் டூ தேர்வு எழுதத் தயாராகிக் கொண்டிருப்பவர்களும் இந்த ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்ஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1989-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதிக்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வயது வரம்பில் ஐந்து ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படும். அதாவது, 1984-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதிக்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்தப் படிப்புகளில் சேர சென்னை ஐஐடி தனி நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வு வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி காலை பத்து மணி முதல் ஒரு மணி வரை மூன்று மணி நேரத்திற்கு நடைபெறும். சென்னை, கோவை, பெங்களூரு, கொச்சி, கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, மற்றும் திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம்.
முதல் பகுதியாக இரண்டரை மணி நேரம் அப்ஜெக்டிவ் முறையிலான வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டும். அடுத்த அரை மணி நேரம் கட்டுரை வடிவில் பதிலளிக்க வேண்டும். முதல் பகுதியில் ஆங்கிலம், பகுப்பாய்வுத் திறனறிவுத் திறன், பொது அறிவு, இந்திய பொருளாதாரம், இந்திய சமூகம், உலக அறிவு, சுற்றுச்சூழல் குறித்த கேள்விகள் கேட்கப்படும். இந்தக் கேள்விகளுக்கு கம்ப்யூட்டர் வழியாக விடையளிக்க வேண்டியதிருக்கும். இரண்டாவது பகுதியில் பொது விஷயங்கள் குறித்து விவாதம் அல்லது அதன் தாக்கம் குறித்தும் எழுத வேண்டி இருக்கும்.
நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைப் பொருத்து தரவரிசைப்படுத்தப்பட்டு அட்மிஷன் வழங்கப்படும். அடுத்த ஆண்டு மே 14-ஆம் தேதி இறுதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இரண்டு படிப்பிற்கும் சேர்த்து மொத்தம் 46 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
படிப்பு கட்டணம்: செமஸ்டர் கட்டணம் ரூ.8,827. விடுதிக் கட்டணம் ரூ.18,150. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு படிப்புக் கட்டணத்தில் ரூ.3 ஆயிரம் விலக்கு வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.800. பொது பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.1,600. மாணவிகள் அனைவருக்கும் கட்டணம் ரூ.800. இணையத்தில் விண்ணப்பிக்கும்போது இந்தியன் வங்கியில் செலுத்தும் வகையில் படிவம் இணைவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து இந்தியன் வங்கிக் கிளையில் பணம் கட்ட வேண்டும். இதற்கு கூடுதலாக பத்து ரூபாய் செலுத்த வேண்டும். உங்கள் பகுதியில் இந்தியன் வங்கி இல்லை என்கிற பட்சத்தில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் ‘IIT Madras HSEE-2014- 2014’ என்ற பெயரில் டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்ப வேண்டும்.
இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பம் அனுப்பினால் போதுமானது. ஆன்லைனில் சரியான தகவல்களைப் பூர்த்தி செய்து இறுதியில் பிரிண்ட் எடுத்து புகைப்படம் ஒட்டி சான்றொப்பம் பெற்று, மதிப்பெண்களின் நகல்களை இணைத்து (The Chairman, HSEE-2014, JEE Office, IIT Madras, Chennai -600036) என்ற முகவரிக்கு 27.1.2014-ஆம் தேதிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.
சென்னை ஐஐடியில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்ஏ படிப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
விவரங்களுக்கு: http://hsee.iitm.ac.in
|
No comments:
Post a Comment