Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 24 December 2013

கறுப்பு வைரம்!

விடுதலையான சில தினங்களிலேயே மண்டேலா விரும்பிச் சென்ற முதல் நாடு இந்தியா. ஏனெனில், இது காந்தி பிறந்த தேசம்.

ரோலிஹ்லஹ்லா மண்டேலா ஜூலை 18, 1918-இல் பிறந்தார். தென்னாப்ரிக்காவின் டிரான்ஸ்கி பிராந்தியத்தில் ம்பாஸே நதி வளப்பத்தியப் பகுதியில் ம்வெஸோ என்கிற குக்கிராமம். பழங்குடியினப் பரம்பரை. ‘ரோலிஹ்லஹ்லா’ என்கிற சொல்லுக்கு க்ஸோஸா மொழியில்,‘கிளையைப் பிடித்து இழுப்பது’ என்று பொருளாம். ஆனால் பொதுவாக இச்சொல்லுக்கு அர்த்தமாகச் சொல்லுவது, ‘பிரச்சினையை உருவாக்குபவன்’.

மண்டேலாவின் தந்தை ஒரு பழங்குடியினத் தலைவர். அங்கிருந்த பல்வேறு பழங்குடி இனத்தவரையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பில் இருந்தார். வெள்ளையரின் காலனி ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு, மண்டேலாவின் தந்தை தன்னுடைய அந்தஸ்தை இழந்தார். உள்ளூர் மாஜிஸ்ட்ரேட்தான் எல்லாருக்கும் தலைவர் ஆனார். இதனால் குழந்தையாக இருந்த மண்டேலாவை தூக்கிக்கொண்டு அவரது பெற்றோர் இடம்பெயர வேண்டியதானது.

கூனு என்கிற மற்றொரு கிராமத்துக்குச் சென்றார்கள். இது முன்பு வசித்து வந்த ம்வெஸோவை விட குக்கிராமம். பசும்புல் போர்த்திய நீண்ட சமவெளி. சாலைகள் இல்லை. கால்நடைகள் நடந்து நடந்து உருவாக்கிய பாதைகள். உள்ளூரிலேயே விளையும் தானியங்களும், காய்கறிகளும்தான் உணவு. குழந்தை மண்டேலா களிமண் மற்றும் மரக்கிளைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பொம்மைகளையும் கொண்டுதான் விளையாடினார்.

மண்டேலாவின் தந்தைக்கு தன்னுடைய மகன் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும் என்று ஆசை. புதியதாக முளைத்திருந்த தேவாலயம், வெள்ளைக்காரக் குழந்தைகள் பயில ஒரு பள்ளியையும் நடத்தியது. பலத்த பரிந்துரையின் பேரில் அங்கு சேர்க்கப்பட்டார் மண்டேலா. ரோலிஹ்லஹ்லா என்கிற பெயர், வாயில் நுழையாததாலோ அல்லது மதமாற்ற நோக்கத்தாலோ தெரியவில்லை. அவரது பெயர் நெல்சன் மண்டேலா என்று பள்ளிப் பதிவேட்டில் பதியப்பட்டது. அவரது பரம்பரையிலேயே பலகையும், பல்பமும் எடுத்துக்கொண்டு முதன்முதலாக கல்வி கற்க பள்ளிக்குச் சென்றவர் மண்டேலாதான்.

அவருக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது அப்பா, நுரையீரல் நோய் காரணமாக காலமானார். தேம்பு என்கிற பழங்குடியினத்தவரின் தலைவராக இருந்த ஜோகிந்தபா, மண்டேலாவின் அப்பாவுக்கு நெருங்கிய நண்பர். ஜோகிந்தபாவை அந்த இனத்துக்குத் தலைவராக பரிந்துரைத்தவரே இவர்தான். தந்தையை இழந்த தனயனான மண்டேலாவை அவர் பொறுப்பேற்றுக் கொண்டு வளர்க்க முடிவெடுத்தார். கூனு கிராமத்திலிருந்து மோட்டார் காரில் தேம்பு மக்களின் தலைநகரான ம்கேஸ்வேனிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஜோகிந்தபா தன்னுடைய மற்ற குழந்தைகளைப் போலவே மண்டேலாவையும் வேறுபாடு காட்டாமல் தன்னுடைய மகனாக வளர்த்தார்.

அவர்களது தாமொழியான க்ஸோஸாவைத் தவிர்த்து ஆங்கிலத்தையும் பயின்றார் மண்டேலா. வரலாறு மற்றும் புவியியல் படிப்பதில் கில்லாடி. இக்கால கட்டத்தில்தான் ஆப்ரிக்காவின் வரலாற்றை அறிந்துகொள்ளும் ஆர்வம் அவருக்கு அதிகமானது. ஜோகிந்தபாவை சந்திக்க நிறைய ஆப்ரிக்க இனத் தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் தொடர்ச்சியாக உரையாடி தம்முடைய இன வரலாற்றை உள்வாங்கிக் கொண்டார்.

வெள்ளையர்கள் வருவதற்கு முன்பாக ஆப்ரிக்க மக்கள், தமக்கென தனித்த கலாச்சாரத்தோடு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள் என்பதை அறிந்ததுமே, தம் இனம் அடிமைத்தளையில் சிக்கிக்கொண்ட அவலத்தை உணர்ந்தார். தங்கள் மண், நிலம், காற்று அனைத்தையுமே வெள்ளையர்கள் வசமாக்கிக் கொண்டார்கள் என்று அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

மண்டேலாவுக்கு பதினாறு வயது. அவர்கள் வழக்கப்படி குழந்தை ஆணாக மாறும் சடங்கு ஒன்று குடும்ப விழாவாகக் கொண்டாடப்படும். உடலில் ஓர் அறுவைச் சிகிச்சையும் நடக்கும். இந்தச் சடங்கை செய்துகொண்டால்தான் தந்தை வழி பாரம்பரியத்தின் அந்தஸ்து கிடைக்கும். சொத்துரிமையும் உண்டு. அதற்குப் பின்னால்தான் திருமணம் செய்துகொள்ளக் கூடிய தகுதியுமுண்டு என்பது ஆப்ரிக்க நம்பிக்கை. மண்டேலாவோடு இருபத்தைந்து பேருக்கு இந்தச் சடங்கு, பெரிய விழாவாக நடந்தது.

விழாவில் பேசிய பழங்குடி இனத்தலைவர்களில் ஒருவர், ‘நம்முடைய அடுத்த தலைமுறையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. சொந்த மண்ணிலேயே அடிமைகளாக வாழ்ந்து மறைய விதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை அவர்களே நிர்வகித்துக் கொள்ள அனுமதிக்கப்படாதவர்களாக ஆகிவிட்டார்கள். வெள்ளையர்களை அனுசரித்து, அவர்களது கால் நிழலில்தான் வாழ்வை முடிக்க விதிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்’ என்று பேசினார்.

மண்டேலா உள்ளிட்டவர்களுக்கு இந்தப் பேச்சைக் கேட்டதுமே, ‘ஜிவ்’வென்றிருந்தது.

ஜோகிந்தபாவின் மகன்களில் ஒருவராக வளர்ந்ததால், அப்பகுதியில் ஓர் இளவரசனுக்குரிய மரியாதையோடு மண்டேலா நடத்தப்பட்டார். வெஸ்லேயான் பள்ளியில் படித்தார். கடினமான உழைப்பின் காரணமாக கல்வியில் சிறந்து விளங்கினார். பள்ளிப் பருவத்தில் தடகள வீரராகவும், குத்துச்சண்டையில் வல்லவராகவும் இருந்தார். கறுப்பு நிறமுடையவராக இருந்தாலும் படிப்பில் சுட்டி என்பதால், வெள்ளைக்கார மாணவர்களிடையேயும் மண்டேலா, ‘ஸ்டார்’. மதோனா என்கிற அவரது முதல் பெண் நண்பரை அங்கேதான் அடையாளம் கண்டுகொண்டார்.

1939-இல் ஃபோர்ட் ஹரே பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஆக்ஸ்போர்டுக்கும், ஹார்வர்டுக்கும் இணையாக ஆப்ரிக்காவில் பேசப்பட்ட பல்கலைக்கழகம் அது. ரோமன் டச்சு சட்டம் பயின்றார். இதைப் பயிலுவதன் மூலமாக சிவில் சர்வீஸ் பணியில் சேரமுடியும். ஒரு கறுப்பினத்தவர் அதிகபட்சமாக அப்போதைய தென்னாப்ரிக்காவில் சேரக்கூடிய வேலை இதுதான்.

இரண்டாம் ஆண்டு படிக்கும்போது பல்கலைக்கழகத்தின் மாணவப் பிரதிநிதி கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். உணவு உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகள் மாணவர்களுக்கு இருந்தன. இதைக் கண்டித்து, சில கோரிக்கைகளை முன்வைத்து தன்னுடைய பதவியிலிருந்து விலகினார். இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும், மண்டேலா தரப்புக்கும் மோதல் வந்தது. அவரை சஸ்பெண்ட் செய்தார்கள். மீண்டும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படும் என்று மண்டேலாவை வலியுறுத்தினார்கள்.

ஒப்புக்கொள்ளாத மண்டேலா, வீட்டுக்குச் சென்றுவிட்டார். அவருடைய வளர்ப்புத் தந்தை ஜோகிந்தபாவுக்கு இது பிடிக்கவில்லை. மண்டேலா பொறுப்பற்றவராக இருக்கிறார் என்று கருதி, அவருக்கு திருமணம் செய்துவைக்கத் திட்டமிட்டார். ஒரு போராளியாக உருவெடுத்துவரும் நேரத்தில் திருமணமா என்று ஆவேசமான மண்டேலா, வீட்டை விட்டும் வெளியேறினார். ஜோகன்னஸ்பர்க் நகருக்கு இடம்பெயர்ந்து பகுதிநேர செக்யூரிட்டியாகவும், கிளர்க்காவும் பணிபுரிந்தார். இளங்கலைப் பட்டத்தை தபால் வாயிலாக படித்துத் தேறினார்.

ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் 1942-ஆம் ஆண்டு மண்டேலா இணைந்தார். இனவெறிப் பாகுபாடுக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக பங்குகொண்டார். கட்சியில் புதியதாக நிறைய இளைஞர்கள் சேர்ந்ததால், ஆப்ரிக்க தேசிய காங்கிரஸின் இளைஞரணி உருவானது. மிகக்குறுகிய காலத்திலேயே இவர்களுக்கு தென்னாப்ரிக்காவில் ஆதரவு பெருகி, கட்சியை விட செல்வாக்கான இடத்தைப் பெற்றார்கள். வெள்ளை அதிகாரிகளிடம் மனு கொடுத்து நீதியை கெஞ்சிக் கேட்டுப் பெறுவது மாதிரியான கட்சியின்  அரதப்பழசான போராட்ட(?) முறைகள் வேலைக்காகாது என்று இந்த இளைஞர்கள் உணர்ந்தார்கள்.

புறக்கணிப்பு, வேலை நிறுத்தம், ஒத்துழையாமை, தொழிலாளர் நலன், நிலச்சீர்த்திருத்தம், அனைத்து கறுப்பினக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என்று இவர்கள் முன்னெடுத்த பிரச்சினைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. வேறு வழியின்றி கட்சியும் இளைஞர்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் ஏற்றுக்கொண்டது. கட்சியின் எல்லா நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டு அறவழிப் போராட்டங்களில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார் மண்டேலா.

போர்ட் ஹரே பல்கலைக்கழகத்தில் மண்டேலாவுக்கு அறிமுகமானவர் ஆலிவர் டாம்பூ. அவரோடு இணைந்து ஒரு சட்ட ஆலோசனை நிறுவனத்தை தொடங்கினார். மண்டேலா - டாம்பூ என்கிற நிறுவனம் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளும் கறுப்பின மக்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்திலும், பல நேரங்களிலும் இலவசமாகவும் சட்ட ஆலோசனை சேவை வழங்கியது. 1956-இல் மண்டேலா கைது செயப்பட்டார். அரசியல் தொடர்பாக அவரோடு சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டார்கள். ஆனாலும் நீதிமன்றத்தில் இவர்கள் அத்தனை பேரும் விடுதலை ஆனார்கள்.

இதற்கிடையே ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில், ‘கறுப்புப் போராளிகள்’ என்று புதுப் போராளிகள் சிலர் புரட்சி செய்யக் கிளம்பினார்கள். நீக்குப்போக்கான கட்சியின் போராட்ட முறைகள் மீது அவர்களுக்கு கடுமையான அதிருப்தி இருந்தது. இவர்கள் விலகி, புதியதாக கண்ட இயக்கம் ஆயுதவழித் தீர்வு.

1961-இல் அதுவரை அகிம்சைப் போராட்டங்கள் வாயிலாக தீர்வு காணலாம் என்று நம்பிக்கொண்டிருந்த மண்டேலாவுக்கும் வன்முறை அரசியல் மீது ஈர்ப்புத் தோன்றியது. கொரில்லா முறைப் போர்களால் வெள்ளையர்களை வென்றுவிடலாம் என்று நம்பிக்கை கொண்டு, கட்சியின் கிளையாக ஓர் அமைப்பை நிறுவினார். அதே ஆண்டு நடந்த மூன்று நாட்கள் தேசிய வேலைநிறுத்தத்தையும் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தினார். இதையடுத்து அவரைக் கைது செய்த வெள்ளையர் அரசு, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

இவ்வழக்கில் மீண்டும் 1963-இல் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டார். இம்முறை அவருக்கும், மேலும் பத்து ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்களுக்கும் ஆயுள் சிறை விதிக்கப்பட்டது. அரசியல் சதி, வன்முறை என்று சகட்டுமேனிக்கு அவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டது.

தன்னுடைய இருபத்தேழு ஆண்டுகள் சிறை வாழ்வில் பதினெட்டு ஆண்டுகளை ரோபன் என்கிற தீவிலிருந்த சிறைச்சாலையில் கழித்தார் மண்டேலா. சிறையில் இருந்தபோது காசநோயால் கடுமையாக துன்பப்பட்டார். கறுப்பரின அரசியல் கைதி என்பதால் அவருக்கு முறையான சிகிச்சை கூட வழங்கப்படவில்லை. இம்மாதிரி துன்பங்களுக்கு இடையேயும் மண்டேலா லண்டன் பல்கலைக்கழகத்தில் தபால் வாயிலாகப் படித்து சட்டத்தில் பட்டம் பெற்றார்.

மண்டேலா சிறைக்குள்ளேயே இருந்தது தென்னாப்ரிக்க அரசுக்கு சர்வதேசத் தளத்தில் கடுமையான சிக்கல்களை உருவாக்கியது. அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்ட தகவல்கள் பிற்பாடு வெளியாயின. 1981-இல் அவரை சிறையில் இருந்து தப்பிக்கவிட்டு, திரும்பப் பிடிப்பதற்குப் பதிலாக சுட்டுக் கொல்லலாம் என்றுகூட ஒரு திட்டம் இருந்தது. மண்டேலாவின் சிறைவாழ்க்கைதான் தென்னாப்ரிக்க காலனிய அட்டூழியங்களையும், அடக்குமுறைகளையும் உலகம் உற்றுக் கவனிக்கக் காரணமாக அமைந்தது.

1982-இல் மண்டேலாவையும், அவரோடு சிறைப்பட்டிருந்த மற்ற தலைவர்களையும் பால்ஸ்மூர் சிறைச்சாலைக்கு கொண்டுச் சென்றார்கள். 1985-இல் அதிபராக இருந்த பி.டபிள்யூ போத்தா, கிளர்ச்சியாளர்கள் போராட்டங்களை விலக்கிக் கொண்டால் மண்டேலாவை விடுதலை செய்துவிடலாம் என்று, ‘பண்டமாற்று’ பேச்சைத் தொடங்கினார். இது இருதரப்பிலும் கடுமையான எதிர்ப்பைத் தோற்றுவித்தது.  நாளுக்கு நாள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ‘மண்டேலாவை விடுதலை செய்’ குரல் வலுவாக ஒலிக்கத் தொடங்கியது. எனவே அவ்வப்போது மண்டேலாவோடு அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஏகப்பட்ட முறை நடந்த பேச்சுகளிலும் பலன் ஏதுமில்லை. அதிபர் போத்தா உடல்நலம் குன்றிய நிலையில் பதவிக்கு வந்தவர் பிரெடரிக் வில்லியம். கடும் நெருக்கடியான சூழலில் பதவிக்கு வந்த இவர் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கினார். அரசியல் அமைப்புகளுக்கு இருந்த கெடுபிடிகளைத் தளர்த்தினார். பிப்ரவரி 11, 1990 அன்று மண்டேலாவின் விடுதலையையும் உறுதி செய்தார்.

சிறையில் இருந்து வெளியான மண்டேலா இதுவரை தென்னாப்ரிக்காவுக்கு சர்வதேச அளவில் தரப்பட்டுக் கொண்டிருந்த அழுத்தம் தன்னுடைய விடுதலையால் குறைந்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். 1991-இல் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக மண்டேலா ஆனார். அதிபர் கிளார்க்குடன் இணைந்து, தென்னாப்ரிக்காவின் அனைத்து மக்களும் பங்குபெறும் வகையிலான தேர்தலை நடத்த ஆர்வம் காட்டினார்.

இச்சூழலில் வெள்ளையர்கள் அதிகாரத்தை கறுப்பின மக்களோடு பகிர்ந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஆனால் கறுப்பின மக்கள் எதிர்பார்த்ததோ அதிகார மாற்றம். இதனால் இரு தரப்பு பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே போனது. கடுமையான அரசியல் அழுத்தம் மண்டேலாவுக்கு ஏற்பட்டது.

1993-ஆம் ஆண்டு மண்டேலாவை விடுதலை செய்த அதிபர் கிளார்க்குக்கும், விடுதலை ஆனபிறகு நாட்டை அமைதி வழியில் வழிநடத்த உத்தேசித்த மண்டேலாவுக்கும் இணைத்து அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இரு தரப்பும் கவுரவப்படுத்தப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த மக்களின் மனமும் அமைதியை நாடியது. ஏப்ரல் 1994-இல் தென்னாப்ரிக்காவின் முதல் ஜனநாயகத் தேர்தல் நடந்தது. நெல்சன் மண்டேலா நாட்டின் முதல் கறுப்பின அதிபராகப் பொறுப்பேற்றார். தான் சிறையில் ரகசியமாக எழுதிய, ‘சுதந்திரத்துக்கான நீண்ட பயணம்’ நூலை மண்டேலா வெளியிட்டார்.

தன்னுடைய முதல் ஆட்சிக்காலப் பொறுப்பில் வெள்ளையர்களின் மைனாரிட்டி அதிகாரத்தை மிக சாதுரியமாக மெஜாரிட்டி கறுப்பினத்தவருக்கு மடைமாற்றிக் காட்டினார் மண்டேலா. இருதரப்பு மக்களும் ஒற்றுமையாக வசிக்க, விளையாட்டை ஆயுதமாகப் பயன்படுத்தினார். நாட்டின் மறுசீராக்கத்திலும், வளர்ச்சியிலும் வேகம் காட்டினார். புதிய வேலைகளை உருவாக்குவது, வீடு மற்றும் மருத்துவம் என்று மக்களின் அடிப்படை வசதிகளை கட்டமைத்துத் தந்தார். 1996-இல் புதிய சட்ட அமைப்பை அறிமுகப்படுத்தினார். தனிப்பெரும்பான்மையோடு கூடிய வலுவான மத்திய அமைப்பு, மைனாரிட்டி மக்களின் உரிமைகளையும் உறுதி செய்யும் சட்டம், கருத்துரிமை என்று மண்டேலா வடிவமைத்த சட்டம் கிட்டத்தட்ட இந்தியாவை ஒத்திருந்தது.

1999 பொதுத் தேர்தலின்போது தன்னை அரசியல் வாழ்விலிருந்து தாமாகவே விலக்கிக் கொண்டார் மண்டேலா. ஆனாலும் மக்களுக்கான அவரது பணி தொடர்ந்துகொண்டே இருந்தது. மண்டேலா அறக்கட்டளை மூலமாக பள்ளி, மருத்துவமனைகளை உருவாக்க நிதி திரட்டிக் கொடுத்தார்.

2001-இல் அவருக்கு கேன்சர் நோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. 2004-இல் தன்னுடைய எண்பத்து ஐந்தாவது வயதில் பொதுவாழ்வில் இருந்து, தான் ஓய்வு பெறுவதாகச் சொன்னார்.

‘இனி என்னை அழைக்காதீர்கள். நானே உங்களை அழைப்பேன்’ என்று மண்டேலா அறிவித்தபோது தென்னாப்ரிக்கர்கள் மட்டுமல்ல, உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களின் கண்களிலும் ஈரம் கசிந்தது. சிறுவயதில், தான் களிமண் பொம்மை செய்து விளையாடிய கூனு கிராமத்தில் தன்னுடைய இறுதிக்காலத்தைச் செலவழிக்க விரும்புவதாக மண்டேலா கூறினார்.

2010-இல் தென்னாப்ரிக்காவில் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெற்றபோது மீண்டும் மக்கள் மத்தியில் பெருத்த ஆரவாரத்துக்கு இடையில் தோன்றினார் மண்டேலா. பின்னர் அமெரிக்க அதிபரின் மனைவி மிச்செல் ஒபாமாவின் தென்னாப்ரிக்க சுற்றுப்பயணத்தின்போதும் அவரோடு தோன்றினார்.

2011-இல் தொடங்கி அவரது உடல்நலம் தொடர்ச்சியாக மோசமாகிக்கொண்டே போனது. மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாக அல்லாடி, கடந்த டிசம்பர் 5 அன்று தன்னுடைய 95-ஆவது வயதில் காலமானார். மண்டேலா மறைந்தார். ஆனால் அவர் உயர எழுப்பிய வெள்ளைக்கொடி தென்னாப்ரிக்காவில் பட்டொளி வீசிப் பறக்கிறது. அமைதி என்கிற  சொல், உலகில் புழங்குகிறவரைக்கும் மண்டேலாவின் பெயர் யாருக்கும் எளிதாக மறந்துவிடாது.

மண்டேலாவும் இந்தியாவும்
  • Ž1893-இல் தன்னுடைய தன்னுடைய இருபத்து நான்காவது வயதில் காந்தி, தென்னாப்ரிக்காவுக்கு வந்தார். வந்த ஒரு வாரத்திலேயே அங்கு நிலவிய இனவெறிப் பாகுபாட்டின் கொடுமையை தனிப்பட்ட முறையில் அனுபவித்தார். இனவெறியாளர்களிடம் அடிமைப்பட்டிருக்கும் தேசங்களின் விடுதலையே மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத செயல்பாடு என்று பிரச்சாரம் செய்தார். தன்னுடைய தாய்மண்ணில்தான் காந்திக்கு இந்த ‘ஞானம்’ கிடைத்தது என்பதால் காந்தி மீதும், அவரால் விடுதலைப்பட்ட இந்தியா மீதும் நெல்சன் மண்டேலாவுக்கு அளப்பரிய மரியாதை ஏற்பட்டது.
  • மகாத்மா காந்தியின் இரண்டாவது மகனான மணிலால், தென்னாப்ரிக்காவில் வாழ்ந்தார். அங்கே வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து, ‘இண்டியன் ஒப்பீனியன்’ என்றொரு குஜராத்தி-ஆங்கில பத்திரிகையையும் நடத்தினார். மக்களுக்காக நீதி கேட்டு போராட்டங்கள் நடத்தி பலமுறை வெள்ளை அரசால் கைது செய்யப்பட்டார். 1949-இல் ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸின் கூட்டம் ஒன்றில் பேசிய மணிலால், ‘எந்த நிபந்தனையுமின்றி காந்தியின் அகிம்சைப் போராட்டத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று பேசினார். 1956-இல், தான் சாகும் வரை கறுப்பர் இன மக்களுக்காக எழுதியும், போராட்டங்களை முன்னெடுத்தும் கொண்டிருந்தார். வேறு தேசத்தில் பிறந்தவராக இருந்தாலும், காந்தியையும் தம்மில் ஒருவராகவே நினைத்த கறுப்பின மக்கள், அவரது மகனை தங்களுக்காக காந்தி அர்ப்பணித்ததை எண்ணி சிலிர்த்துக் கொண்டார்கள்.
  • இன விடுதலைக்கு ஆயுதப் போராட்டம் தாண்டிய வெற்றிகரமான தீர்வினை மகாத்மா காந்தி கண்டறிந்தார். அகிம்சைப் போராட்டங்களின் வாயிலாக இந்தியாவை காலனியாதிக்கத்தில் இருந்து அவர் விடுதலை பெறச் செய்தது உலகெங்கும் போராடிக் கொண்டிருந்த கணிசமான போராளிகளை ஈர்த்தது. அவர்களில் ஒருவர் நெல்சன் மண்டேலா. வன்முறை தவிர்த்த போராட்டங்களை இனி வெள்ளையர்களுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டும் என தன் மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். இந்தியாவின் விடுதலையே நெல்சன் மண்டேலாவுக்கு உந்துசக்தியை வழங்கிய நிகழ்வு.
  • ரோபன் சிறையில் அடைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் மண்டேலா எழுதிய டயரிப் பக்கங்களில் காந்தியும், இந்தியாவும் அதிகமாக இடம்பெற்ற விஷயங்கள். இந்தியாவை சத்தியாகிரகம் பெற்ற பிள்ளையென்று வர்ணித்து எழுதியிருக்கிறார் மண்டேலா.
  • Žநெல்சன் மண்டேலா 1990-இல் விடுதலை ஆனதுமே அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான, ‘பாரத ரத்னா’ அறிவிக்கப்பட்டது. மண்டேலாவுக்கு முன்பாக இவ்விருதைப் பெற்ற இந்தியரல்லாத ஒருவர் எல்லை காந்தி என்று அழைக்கப்படும் கான் அப்துல் கபார் கான் மட்டுமே. இன்றுவரை பாரத ரத்னா பெற்ற வெளிநாட்டவர் இவர்கள் இருவர் மட்டும்தான்
  • மண்டேலா விடுதலை ஆனதை தென்னாப்ரிக்காவோடு இணைந்து, இந்தியாவும் கொண்டாடியது. கொச்சி நகரில் ஒரு சாலைக்கு அவரது பெயர் இடப்பட்டது. தலைநகர் தில்லியிலும் ஒரு குடியிருப்புப் பகுதி அவரது பெயரால் வழங்கப்படுகிறது.
  • Žடாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது 2004-ஆம் ஆண்டு தென்னாப்ரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மண்டேலா சிறை வைக்கப்பட்டிருந்த அறையை நேரில் சென்று பார்த்தார். ‘தென்னாப்ரிக்காவில் நான் கண்டதிலேயே சிறந்த இடம் இதுதான்’ என்று கலாம் சொன்னார். பின்னர் குடியரசுத் தலைவராக வந்த பிரதிபா பாட்டீலும் அதே சிறை அறையைப் போய் பார்த்தார். ‘இது வழிப்பாட்டுக்குரிய இடம்’ என்றார்.
குடும்பம்

மண்டேலாவுக்கு மூன்று முறை திருமணம் ஆகியிருக்கிறது. 1944 முதல் 1957 வரை எவலின் மாஸே என்பவரோடு வாழ்ந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள். பின்னர் 1958-இல் வின்னீயை மணந்தார். இரு மகள்கள். 1998-இல் மாசேலை மணந்தார்.

அமைதிக்காகவும், சமத்துவத்துக்காகவும் போராடிய மண்டேலா கடைசி நாட்களில் எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தையும்,  பிரச்சாரத்தையும் முன்னெடுத்தார். ஏனெனில் அவரது மகன்களில் ஒருவரான மகாத்தோ 2005-ஆம் ஆண்டு இந்நோயால் மரணமுற்றார்.

No comments: