மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில்கல்வி படிப்புகளை பதிவு செய்துள்ளோர், திருத்தங்கள் செய்வதற்கு டிசம்பர் 20 மற்றும் டிசம்பர் 23-ஆம் தேதிகளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் முருகேசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
தமிழகத்திலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணையதளம் மூலம் இணைக்கப்பட்டு அனைத்து பதிவுதாரர்களின் விவரங்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இணையதள முகவரியில் பதிவுதாரர்கள், பதிவு விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம். பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். பதிவு அடையாள அட்டையின் நகலினையும் இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
பதிவுதாரர்கள் தமது பதிவு விவரங்களை சரிபார்க்கும் போது, காணப்படும் எழுத்துப்பிழைகள், பதிவு விடுபாடுகள், பதிவு மூப்பு திருத்தங்கள் ஏதேனும் இருந்தால், அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு கல்வித்தகுதி வாரியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய கல்வித் தகுதி பதிவு செய்துள்ளவர்கள் டிசம்பர் 20-ம் தேதியும், டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ இன் கம்ப்யூட்டர்சயின்ஸ் அண்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய கல்வித்தகுதி பதிவு செய்துள்ளவர்கள் டிசம்பர் 23-ம் தேதியும் சரி செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள் தங்களது பதிவு விவரங்களை இணையதளத்தில், இணையதள முகவரி tnvelaivaaippu.gov.in -இல் சரிபார்த்து, அதில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை சரிசெய்ய உடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு திருத்தங்களைச் சுட்டிக்காட்டி, சான்றுகளுடன் டிசம்பர் 20-ம் தேதியும், டிசம்பர் 23-ம் தேதியும் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை(கையெழுத்துப்பிரதி), இணையதளம் மூலம் பெறப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள சான்றுகள், குடும்பஅட்டை மர்றும் சாதிச்சான்று ஆகிய சான்றுகளை இணைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment