தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பாதை மாறிச் செல்லும் மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடமாடும் உளவியல் ஆலோசனை மையத்தின் மூலம் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்குவதற்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கோவை, தஞ்சை, புதுக்கோட்டை, சேலம் ஆகிய 10 மண்டலங்களுக்கும் பயிற்சி பெற்ற உளவியல் ஆலோசகர், உதவியாளர் அடங்கிய ஒரு வேன் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் 3 முதல் 4 மாவட்டங்கள் உள்ளடங்கியுள்ளன. அந்தந்த மண்டலத்திலுள்ள உளவியல் ஆலோசகர்களுக்கு 3 கட்டப் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக, மண்டலத்திலுள்ள மாவட்டந்தோறும் பிரச்னைக்குரிய பள்ளிகள், மதிப்பெண்ணில் பின்தங்கிய பள்ளிகள் போன்றவற்றை பட்டியலிட்டு உளவியல் ஆலோசகர்கள் பெற்றுள்ளனர். இந்த வகையில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளுக்கு அக்டோபர் மாதம் முதல் வேனில் சென்று உளவியல் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
ஒட்டுமொத்தமாக பள்ளியிலுள்ள 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பருவத்தில் ஏற்படும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள், காதல் வயப்பட்டு கல்வியிலிருந்து விலகிச் செல்வதைத் தடுப்பது, கல்வியின் அவசியம், உயர்கல்வியில் வாய்ப்புகள், தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுதல், போதைப் பொருள் பழக்க வழக்கங்களால் ஏற்படும் விளைவுகள், கல்வியில் நாட்டம் செலுத்துவது எப்படி போன்றவை குறித்து ஆலோசனைகள் வழங்குகின்றனர். குறிப்பிட்ட பள்ளிகளில் பிரச்னைக்குரிய சில மாணவ, மாணவிகள் இருந்தால், அவர்களுக்கு தனித் தனியாகவும் வேனில் வைத்து உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
அத்துடன், 2-ஆம் கட்டமாக மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது எப்படி, பாதை மாறிச் செல்லும் மாணவர்களைத் தடுப்பது போன்றவற்றில் ஆசிரியர்களின் பங்கு போன்றவை குறித்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில், மதுரை மண்டலத்துக்குள்பட்ட மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் உளவியல் ஆலோசகர் ப.கார்த்திகேயன் கூறியதாவது:
இதுவரை மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் 35 பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை கொடுத்துள்ளோம். விருதுநகர் மாவட்டத்தில் சில பள்ளிகளில் இன வேறுபாடுகள், பிரச்னைகள் இருந்தன. இதற்கும் உரிய ஆலோசனைகள் வழங்கியுள்ளோம்.
அரையாண்டுத் தேர்வு முடிந்து ஜனவரியில் பள்ளிகள் துவங்கியவுடன் விடுபட்ட திண்டுக்கல் மாவட்டப் பள்ளிகளிலும், தேனி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் ஆலோசனை வழங்கப்படும். இதுவரை 2 கட்ட பயிற்சிகள் கொடுத்து வருகிறோம். 3-ஆம் கட்டப் பயிற்சி குறித்து பள்ளிக் கல்வித் துறையிலிருந்து உத்தரவு வந்த பின்னர், உரிய பயிற்சி அளிக்கப்படும் என்றார் அவர்.
No comments:
Post a Comment