Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 30 December 2013

கல்வி நிறுவனங்களுக்கு மானியம்: யுஜிசி நிபந்தனை

தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலான "நாக்' ஆய்வு செய்து தரச் சான்றளிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே மானியங்கள் அளிக்கப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கும் பல்கலைக்கழகங்களும் இப்போது யுஜிசி கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. யுஜிசி 2012 விதிமுறைகள் பிரிவு 7.1-இன் படி நாக் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சான்றளிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனத்துக்கு மட்டுமே மானியங்களை வழங்குவது என கடந்த நவம்பர் 29-ம் தேதி நடைபெற்ற யுஜிசி-யின் 496-வது கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதன் காரணமாக, உயர் கல்வி நிறுவனங்கள் 2014 ஜூன் 1-ம் தேதிக்குள், ஆய்வு மற்றும் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்துவிட வேண்டும். அதுவரை நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின் படி தொடர்ந்து மானியங்கள் வழங்கப்படும்.
ஆய்வுக்கு விண்ணப்பிக்கத் தவறும் அல்லது அங்கீகாரம் பெறத் தவறிய கல்வி நிறுவனங்களுக்கு 2015 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து மானியங்களும் நிறுத்தப்பட்டு விடும் எனவும் யுஜிசி அறிவித்துள்ளது.
இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் "தினமணி'க்கு அளித்த பேட்டி:
யூஜிசி மானியத்தைப் பெற கலை, அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைப் போல் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களும், தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளும் இனி "நாக்' அங்கீகாரம் பெறுவது கட்டாயம்.
ஏற்கெனவே, தேசிய அங்கீகார வாரியத்தின் (என்பிஏ) அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள், அந்த அங்கீகாரம் காலாவதியானவுடன், "நாக்' அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
6 மண்டல மையங்கள்:
"நாக்' தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது. இந்த ஒரே அலுவலகம், நாடு முழுவதும் உள்ள கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகளை தமது நான்கு (தெற்கு, வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு, மேற்கு) மண்டல ஒருங்கிணைப்பாளர்களின் உதவியுடன், கல்வி நிறுவனங்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு அங்கீகாரம் அளித்து வருகிறது.
இந்த நிலையில், யுஜிசி கட்டுப்பாட்டின் கீழ் வரும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தொடர் ஆய்வு மற்றும் சான்றளிக்கும் பணியை "நாக்' எளிதாகவும் விரைவாகவும் செய்யும் வகையில் நாடு முழுவதும் 6 மண்டல அலுவலகங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

No comments: