தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் பெறும் மதிப்பெண்களே அடுத்தடுத்த உயர்கல்விகளுக்கு வழிகாட்டுகிறது. வரும் மார்ச் முதல் நடக்க இருக்கும் பொதுத்தேர்வுகளில் தற்போது பல்வேறு மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு தேர்வெழுதும் மாணவரிடம் மெயின் சீட் வழங்கப்பட்டு, கூடுதலாக எழுதுவதற்கு அடிசனல் சீட்கள் அடுத்தடுத்து வழங்கப்படும். ஆனால் தற்போது 12ம் வகுப்பிற்கு 40 பக்கங்களும், 10ம் வகுப்பிற்கு 30 பக்கங்களும் கொண்ட மொத்தமாக பைன்ட் செய்த கோடிங் ஷீட் பண்டல் வழங்கப்படும். இதனால் கூடுதல் பேப்பருக்கு மாணவர் எழுந்து நிற்பதும், ஆசிரியர் கையெழுத்துப் பெற்று ஒவ்வொரு முறையும் பேப்பர் வழங்குவதும் இருக்காது. இதனால் மாணவர், ஆசிரியர் நேர விரயம் தடுக்கப்படுவதுடன், ஒரு மாணவரது அடிசனல் ஷீட்டை வாங்கி மறைத்து வைத்து மற்றொரு மாணவர் காப்பியடிப்பதும் தடுக்கப்படும்.
இதேபோல் ஒரு தேர்வு மையத்திற்கு அதிகபட்சம் 400 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத முடியும். அதற்கும் மேல் மாணவர்கள் இருந்தால் அருகாமை பள்ளி தேர்வு மையத்திற்கு மாற்றப்படுவர். அல்லது அதே பள்ளியில் கூடுதல் மாணவர்களுக்கென மற்றொரு தேர்வு மையம் ஏற்படுத்தப்படும். இதுதவிர, முன்பு தேர்வு மையத்திற்கு வரும் ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும், குறைந்தது நூறு வினாத்தாள்கள் இருக்கும். தேர்வு மைய அதிகாரிகள் இதனைப் பிரித்து, ஒவ்வொரு அறையிலும் இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்குவர். ஆனால் இனிமேல், ஒரு அறைக்கு 20 மாணவர்களுக்கு மட்டுமே தேர்வெழுத இடம் ஒதுக்கப்படும். ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும் 20 வினாத்தாள்களே இருக்கும். இதனால் வெளியில் உடைக்கப்பட்டு, வினாத்தாள் அவுட் ஆகி விட்டது என்ற குற்றச்சாட்டுகள் வராது.
No comments:
Post a Comment