தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் 108 உதவி பொறியாளர் (சிவில்) பணியிடங்கள் மாநில அளவிலான பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அரசு விதிமுறையின்படி, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அதன்படி, உதவி பொறியாளர் (சிவில்) பதவியில் 20 சதவீத இடங்கள் அதாவது, 21 இடங்கள் தமிழ்வழியில் படித்த பி.இ. சிவில் பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்படும். இந்த இடஒதுக்கீடு ஒவ்வொரு பிரிவிலும் (ஒ.சி., பி.சி, எஸ்.சி., எஸ்.டி. போன்றவை) தனித்தனியே பின்பற்றப்படும். அரசின் இடஒதுக்கீட்டு விதியின்படி, அருந்ததியர், பெண்கள், தமிழ்வழியில் படித்தவர்கள் ஆகிய முன்னுரிமை பிரிவினருக்கு ஒதுக்கப்படும் இடங்களில் தகுதியானவர்கள் கிடைக்காத பட்சத்தில் குறிப்பிட்ட வகுப்பில் உள்ள பொதுபிரிவினர்களைக் கொண்டு நிரப்பிக்கொள்ளலாம். உதாரணமாக பெண்ணுக்கு பதிலாக ஆணுக்கும் அருந்ததியருக்கு பதிலாக ஒரு தலித்துக்கும் தமிழ்வழியில் படித்தவருக்கு பதிலாக ஆங்கிலவழி படித்தவருக்கும் தந்துவிடுவார்கள்.
எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு ஒதுக்கப்படும் இடங்கள் அப்படியே பின்னடைவு காலியிடங்களாக (பேக்லாக் வேகன்சி) வைக்கப்பட்டு தகுதியானவர்கள் கிடைக்கும்போது பின்னர் நிரப்பப்படும். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பி.இ. சிவில் படிக்கும் மாணவ-மாணவிகளின் முதல் அணி (பேட்ச்) அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியே வருகிறது.
ஆனால், 108 உதவி பொறியாளர்களை நிரப்புவதற்கான பணிநியமனப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. எனவே, தமிழ்வழியில் படித்தோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் (எஸ்.சி, எஸ்.டி.வகுப்பினருக்கு உரியவை நீங்கலாக) ஆங்கிலவழியில் பி.இ. சிவில் படித்தவர்களுக்கு சென்றுவிடும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான காலியிடங்கள் மட்டும் பின்னடைவு காலியிடங்களாக வைக்கப்பட்டு இருக்கும். எனவே, அடுத்த ஆண்டு தமிழ்வழியில் பி.இ. சிவில் முடிக்கும் எஸ்.சி.,எஸ்.டி. மாணவ-மாணவிகள் இந்த வேலைவாய்ப்பை பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment