தமிழகத்தில் ‘ஆட்டிசம்’ குழந்தைகளுடைய கற்றல் திறன், தனித்திறமை களைக் கண்டுபிடித்து ஊக்குவிக்க, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பயிற்சிப் பள்ளி அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 200 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை, ‘ஆட்டிசம்’ குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளது. ‘ஆட்டிசம்’ பாதிப்புள்ள குழந்தைகள், செயல்பாடு, பழகும் தன்மை ஆகியவற்றில் மற்ற குழந்தைகளில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2010-ம் ஆண்டு ஆட்சியராக வள்ளலார் இருந்தபோது மருத்துவத்துறை, பொதுசுகாதாரத்துறை, குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை, கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் மாவட்டம் முழுவதும் ‘ஆட்டிசம்’ பாதித்த குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாவட்டத்தில் 150 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இந்த குழந்தைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் பெங்களூர் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (நிமான்ஸ்) மற்றும் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்புப் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. திண்டுக்கல், நத்தம், பழநி, கொடைக்கானல், வடமதுரையில் இப்பள்ளிகள் செயல்படுகின்றன. 336 ‘ஆட்டிசம்’ குழந்தைகள் பயிற்சி பெறுகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு மாநிலம் முழுவதும் ‘ஆட்டிசம்’ குழந்தைகளை கண்டுபிடித்து, அவர்கள் கற்றல் அறிவு, தனித்திறமைகளை வெளிப்படுத்த, சிறப்புப் பயிற்சிப் பள்ளிகளைத் துவங்க உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்புப் பயிற்சிப் பள்ளிகளில், குழந்தைகள் மன நல மருத்துவர், உளவியல் நிபுணர், செயல்முறை மருத்துவர், பேச்சுப்பயிற்சியாளர், ஆலோசகர், சிறப்பு கல்வி பயிற்சியாளர் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் ‘ராஷ்டிரிய பால் சஷ்டிய காரிய கிராம்’ திட்டத்தின்கீழ் சிறப்புப் பள்ளிகளைத் துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் சிறப்புப் பள்ளிக் கட்டிடங்கள் கட்ட பொதுப்பணித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment