Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 20 November 2013

100 நாள் வேலை திட்டப் பணிகளை கவனிக்க கணினி ஆபரேட்டர்கள்

தமிழகத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் நிதி உதவியுடன் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் கிராமப்புற மக்களுக்கு அதிகபட்சம் ரூ.148 சம்பளத்தில் 100 நாட்களுக்கு உறுதியாக வேலை வழங்கப்படும்.
இதற்கான சம்பளம் பணமாகவும், வங்கிக் கணக்கு மூலமாகவும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 12,524 ஊராட்சிகள் உள்ளன. 100 நாள் வேலை திட்டத்துக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி வழங்குகிறது. இந்த திட்டத்தில் வேலைசெய்யும் பயனாளிகளின் பட்டியல், அவர்களுக்கு வேலை ஒதுக்கீடு செய்வது, சம்பள பட்டுவாடா, வங்கிக் கணக்கு என ஏராளமான நிர்வாகப் பணிகளை ஊரக வளர்ச்சித் துறையினர் செய்ய வேண்டியுள்ளது.
இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்தின் நிர்வாகப் பணிகளை கவனித்துக்கொள்வதற்காக அனைத்து ஊராட்சிகளிலும் (12,524) கணினி ஆபரேட்டர்களை தொகுப்பூதியத்தில் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே வட்டார அளவில் பணியாற்றி வரும் கணினி ஆபரேட்டர்களுக்கு ரூ.7,500 தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. தற்போது ஊராட்சிகளில் நியமிக்கப்பட உள்ள கணினி ஆபரேட்டர்களுக்கு ரூ.5,000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் நிதியுதவி
அனைத்து ஊராட்சிகளிலும் நியமிக்கப்படும் கணினி ஆபரேட்டர்களுக்கு வழங்குவதற்கான ஊதியத்தை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு தமிழக அரசு ஒரு கருத்துருவை அனுப்பியுள்ளது. ஒருவேளை மத்திய அரசு நிதியுதவி அளிக்காத பட்சத்தில் சம்பளச் செலவை 100 நாள் வேலை திட்டத்தில் சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது..
100 நாள் வேலை திட்டத்துக்கு வழங்கப்படும் நிதியில் 6 சதவீதத் தொகையை நிர்வாக செலவுக்காக பயன்படுத்த முடியும். அந்த வகையில், தமிழகத்துக்கு வழங்கப்படும் ரூ.5,000 கோடியில் ரூ.300 கோடியை நிர்வாக செலவினங்களுக்குப் பயன்படுத்துவதில் தமிழக அரசுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது.

No comments: