Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 19 November 2013

"காட்சி உலா ரதம்' மாணவர்களை சந்திக்க வருகிறது

சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவர்கள் பார்வையிடுவதற்காக, "காட்சி உலா ரதம்' என்ற நடமாடும் அருங்காட்சியகம் தயாராகி வருகிறது.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் கடந்த 1851-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்குள்ள அரியவகைப் பொருள்களை பார்வையிட நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறுவர்களுக்கு ரூ.10-ம், கல்லூரி கடிதம் பெற்று வரும் மாணவர்களுக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தினமும் 1,500 முதல் 2000 பேர் வரை அருங்காட்சியகப் பொருள்களைப் பார்வையிடுகின்றனர்.
ரூ.30 லட்சம் மதிப்பில் பஸ்: மாணவர்களிடம் வரலாறு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அருங்காட்சியகத்தில் உள்ள பொருள்களை பள்ளி மாணவர்களிடம் காண்பிக்க அருங்காட்சியகத்துறை முடிவு செய்தது. கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து இதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது ரூ.30 லட்சம் மதிப்பிலான காட்சி ரத உலா என்ற கிளாஸ் 4 ரக பஸ், நடமாடும் அருங்காட்சியகமாகச் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அருங்காட்சிய அதிகாரி ஒருவர் கூறியது:
30 கண்ணாடிப் பேழைகள்: நடமாடும் அருங்காட்சியகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பஸ்ஸில் 30 கண்ணாடிப் பேழைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் தொல்லியல், விலங்கியல், நாணயவியல், மானுடவியல், பழங்கால சிலைகள் மற்றும் அறிவியல் சாதனங்கள், இசைக் கருவிகள், கற்கால ஒவியங்கள், வரலாற்று படிமங்கள், நாணயங்கள், நாட்டுப்புறக் கலைகள், தாவரவியல் கண்டுபிடிப்புகள், உள்ளிட்ட 11 துறைகளைச் சேர்ந்த வரலாற்று அடையாளங்கள் காட்சிக்கு வைக்கப்படும். காட்சி ரத உலா பஸ்ஸின் 90 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் இந்த பஸ் பள்ளிகள் தோறும் செல்ல உள்ளது. இதன் மூலம் வரலாறு குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடம் மேம்படும் என்றார்.
முதல் வானொலி அலைப்பரப்பி: தென்னிந்தியாவில் முதன் முதலாக 1924-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட வானொலி அலைபரப்பி அருங்காட்சியகத்தில் திங்கள்கிழமை காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. 200 வாட் திறன் கொண்ட இந்த அலைப்பரப்பி சென்னை மட்டுமின்றி சித்தூர், விஜயநகரம் மற்றும் இலங்கை வாழ் மக்களாலும் கேட்டு பயனுறப்பெற்றது. இந்த அலைப்பரப்பி 1939-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அரசு அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதனை பள்ளி மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் திங்கள்கிழமை (நவ.18)பார்வையிட்டனர். டிசம்பர் 1-ந்தேதி வரை இந்த வானொலி அலைப்பரப்பி காட்சிக்காக வைக்கப்படுகிறது.

No comments: