நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறைச்செயலர் டி.சபீதா, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என்.ரங்கராஜன், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில், 1986-ல் இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். 1996-ல் தேர்வு நிலை பெற்றேன். தற்போது நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். 2009-ம் ஆண்டு அரசாணைப்படி, தேர்வு நிலையில் உள்ள ஆசிரியர்கள் கீழ்நிலை பணிகளில் இருந்தால் ஒரு சிறப்பு நிலை பதவி உயர்வு அளிக்கப்படவேண்டும்.
இதன்படி 2009-ல் 65 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. எனக்கு தகுதி இருந்தும் பதவி உயர்வு வழங்கவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் எனது மனுவைப் பரிசீலித்து 8 வாரங்களுக்குள் முடிவு செய்து உத்தரவிடுமாறு 2011-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 17 மாதங்கள் கடந்த போதும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என தெரிவித்து இருந்தார்.
இந்த மனு மீதான முந்தைய விசாரணையின் போது பள்ளிக்கல்வித்துறைச் செயலர் நேரில் ஆஜராக நீதிபதி எஸ்.நாகமுத்து உத்தரவிட்டிருந்தார். இதன் படி பள்ளிக்கல்வித்துறைச் செய்லர் டி.சபீதா செவ்வாய்க்கிழமை ஆஜரானார். மேற்படி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்திவிட்டதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment