பிளஸ் 2 படித்துவிட்டு போலி சான்றிதழ் மூலம் சென்னை மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர் போலி சான்றிதழ்கள் மூலம் வேலைக்கு சேர்ந்துள்ளதாக புகார் கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, சட்டபூர்வ நடவடிக்கை எடுத்திட அரசு உத்தரவிட்டது. இதன் பேரில் மாநகராட்சி கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் போலி சான்றிதழ் மூலம் ஆசிரியர்கள் சிலர் வேலைக்கு சேர்ந்திருப்பது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ். ஜார்ஜிடம், மாநகராட்சி கல்வி அதிகாரி ரவிச்சந்திரன் கடந்த செப்டம்பர் மாதம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஆர்.எஸ்.நல்லசிவத்துக்கு ஜார்ஜ் உத்தரவிட்டார்.அந்த உத்தரவின்படி நல்லசிவம் தனிப்படை அமைத்து அந்த புகார் குறித்து விசாரித்து வந்தார். இதில் கொடுங்கையூர் எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களாக வேலை செய்த எம்.ஜி.ஆர்.நகர் 3-வது தெருவைச் சேர்ந்த எம்.குப்பன் (48),பெரம்பூர் எம்.எஸ்.முத்துநகரைச் சேர்ந்த தி.ராஜா (40) ஆகிய இருவரும் பிளஸ் 2 படித்துவிட்டு ஆசிரியர் பட்டயப்படிப்பு படித்துவிட்டதாக போலி சான்றிதழ் தயாரித்து கடந்த 1998ம் ஆண்டு பணிக்கு சேர்ந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை போல,மேலும் 7 பேர் போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் வேலையில் சேர்ந்திருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளதாம். இதனால் அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment