அனைத்து குழந்தைகளுக்கும் 18 வயது வரை இலவசக் கல்வியை அளிக்க வேண்டும் என "குழந்தை உரிமைகளும் நீங்களும்’ (க்ரை) தொண்டு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
க்ரை அமைப்பின் சார்பில் "குழந்தைகள் உரிமைகளுக்காக வாக்களிக்க’ என்ற தலைப்பில் நாடு தழுவிய தேர்தல் பிரசாரம் சென்னையில் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இதில் குழந்தைகள் உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. இது குறித்து க்ரை அமைப்பின் தென் மண்டல இயக்குநர் சுமா ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குழந்தை உரிமைகள் குறித்த தேர்தல் அறிக்கையில் 18 வயது வரை அனைவரையும் குழந்தைகளாக அறிவிக்க வேண்டும். 18 வயது வரை அனைவருக்கும் இலவசக் கல்வியை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கென தற்போதுள்ள நிதி ஒதுக்கீட்டை 4.8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையாக க்ரை அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகளை அரசியல் கட்சிகளின் கொள்கைகளிலும், தேர்தல் அறிக்கைகளிலும் இடம்பெறும் வண்ணம் அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்களிடமும் இந்த அறிக்கையினை அளிக்க உள்ளோம் என்றார் அவர். மேலும், குழந்தைகள் உரிமைகள் குறித்த கையெழுத்து இயக்கத்தினை நடத்தி அதனை மத்திய, மாநில அரசுகளிடம் க்ரை அமைப்பு சமர்ப்பிக்க உள்ளது என்றார்.
No comments:
Post a Comment