Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 29 October 2013

TRB PG ASSIST. TAMIL EXAM : தேர்வில் பிழையான கேள்வித்தாள்: மறுதேர்வு உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்தும் உத்தரவுக்கு உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன. பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். அதன் விவரம்:
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியருக்கான போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 31 ஆயிரத்து 983 பேர் எழுதியுள்ளனர். ஏ,பி,சி,டி என நான்கு பிரிவாக வழங்கப்பட்ட வினாத் தாளில் பி வரிசையில் 8,002 பேர் எழுதியுள்ளனர். நான்கு பிரிவு வினாத்தாளும் ஒன்றே, கேள்விகளின் வரிசையில் மற்றும் மாற்றம் இருக்கும். இருப்பினும், பி வரிசை வினாத்தாளில் 54 இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன. அதுவும் ங் என்ற எழுத்து து எனவும், ழ் என்பது துணைக் காலாகவும் அச்சிடப்பட்டுள்ளது.
தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண்ணை எடுத்தவர், பி வரிசை வினாத்தாளில் தான் எழுதியிருக்கிறார். அதோடு, அதிக மதிப்பெண் எடுத்த முதல் 10 பேரில் 6 பேர் பி வரிசை வினாத்தாளில் எழுதியவர்கள். ஆனால், இரு தேர்வர்கள் மட்டுமே எழுத்துப் பிழையான 21 கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், பிழையான 40 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் வழங்குவது அல்லது பிழையான கேள்விகளை நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்வது என இரு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், இதை தனி நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.
அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ், ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமாகிறது. தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், மறுதேர்வு நடத்துவதால் இந்தப் பணி மேலும் தாமதமாகும்.
மேலும், 31 ஆயிரத்து 983 பேர் எழுதிய தமிழ்ப் பாடத் தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வு நடத்துவது தேவையற்ற பெரும் செலவினத்தை ஏற்படுத்தும்.  அதோடு, முந்தைய தேர்வை நன்றாக எழுதியவர்கள், மறுதேர்வில் அதே அளவுக்கு சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம். மறுதேர்வை சில தேர்வர்கள் எழுத முடியாமலும் போகலாம். இதனால் அவர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். ஆகவே, மறுதேர்வு உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த எம்.ஜெய்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதித்தது. இந்த வழக்கு விசாரணை வரும் நவம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments: