மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியில் சேர, தகுதித் தேர்வு தேர்ச்சி அவசியம். அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி ஆகிய அனைத்து விதமான பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேச நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் சேர வேண்டுமானால் சி-டெட் என்று அழைக்கப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வினை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது.
சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் இதேபோல் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு குறிப்பிட்ட அரசு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை தகுதித்தேர்வை (டெட்) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் (150-க்கு 90 மதிப்பெண்) என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய தகுதித்தேர்வு முடிவு ஒரு வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், 2014-ம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பினை சி.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வருகிற 31-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
அதில், மத்திய தகுதித்தேர்வு தேர்ச்சியை மாநில அரசுகள் தேர்ச்சிக்கு பரிசீலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த உத்தரவு தமிழ்நாடு உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் (காஷ்மீர் தவிர) பொருந்தும்.
பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு நடத்தும் தகுதித்தேர்வை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும்போது, சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை மட்டும் ஏன் ஏற்கத் தயங்கவேண்டும் என்பது கல்வியாளர்களின் கேள்வி.
சி-டெட், டெட் இரு தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களுமே தேசிய ஆசிரியர் கல்வி பயிற்சி கவுன்சில் (என்.சி.டி.இ.) வழிகாட்டுமுறைகள் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டவை. எனவே, யு.ஜி.சி. நெட் தேர்ச்சியை கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு அங்கீகரிப்பதைப் போன்று சி-டெட் தேர்ச்சியையும் தமிழக அரசு, ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்க வேண்டும் என்பது ஆசிரியர் பயிற்சி முடித்த பலரின் வேண்டுகோளாக உள்ளது.
No comments:
Post a Comment