பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க தமிழ்நாடு கிளை தலைவர் பி.எஸ்.சந்திரசேகர், துணைத் தலைவர் சி.பிச்சாண்டி, அகில இந்திய பல்கலைக்கழக-கல்லூரி ஆசிரியர்கள் சங்க தேசிய செயலாளர் பி.ஜெயகாந்தி ஆகியோர் செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
சமீப காலமாக பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் முறையாக நடைபெறவில்லை. ஏராளமான சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதன் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
ஆசிரியர், ஊழியர் நியமனங்கள் முறையாக நடப்பதில்லை. துணைவேந்தர் ஓய்வுபெற 3 மாதங்கள் இருக்கும் நிலையில் அவர் கொள்கை முடிவு ஒன்றும் எடுக்கக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், இதையெல்லாம் மீறி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரின் கடைசி பணி நாளில் 36 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. இதுகுறித்து விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.
உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், துணைவேந்தர் நியமனங்கள் முறையாக இல்லாமல் இருந்து வருகிறது. பாரதிதாசன், பெரியார், அழகப்பா பல்கலைக்கழகங்களுக்கு விரைவில் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அங்கேயாவது நல்லவர்களை துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும்.
அண்மையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் தனது சொத்து விவரங்களை பகிரங்கமாக வெளியிட்டார். அவரைப் பின்பற்ற மற்ற துணைவேந்தர்களும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்.
கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாதவர் களுக்காக கொண்டுவரப்பட்டதுதான் தொலைதூரக்கல்வி திட்டம். ஒரு பல்கலைக்கழகத்தின் அதிகார எல்லைக்குள்தான் தொலைதூரக்கல்வி மையங்கள் இயங்க வேண்டும். ஆனால், இப்போது எங்கெங்கேயோ மையங்களை தொடங்க அனுமதி கொடுக்கிறார்கள். இதில்தான் ஊழல் தலைவிரித்தாடுகிறது. எனவே, தொலைதூரக்கல்வி மையங்களுக்கு அனுமதி கொடுப்பதை உடனடியாக முறைப்படுத்தியாக வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி அந்தஸ்து பெற்றவை என்றாலும், அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தைத்தான் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment