Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 26 November 2012

கணக்குப் புலிகளுக்கு கல்வி உதவித் தொகை


கணித ஆய்வில் ஆர்வமிக்க மாணவர்களா நீங்கள்? மாதம் ரூ.16 ஆயிரம் கல்வி உதவித் தொகையுடன் பிஎச்டி படிக்க விரும்பும் பிஎஸ்சி, பி.டெக், பி.இ, எம்எஸ்சி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

அறிவியல், பொறியியல் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாடம் கணிதம். கணிதப் பாடத்தைக் கற்றுத் தர நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த பல கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. கணிதப் பாடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசின் அணுசக்தித் துறையினால் தொடங்கப்பட்டதுதான் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேத்மேட்டிக்ஸ். மும்பையில் 1983ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனம், கணிதம் தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. 2013-14 கல்வி ஆண்டில் கணிதப் பாடத்தில் பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பில் சேருவதில் ஆர்வம் மிக்க மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன் படிக்க வாய்ப்பையும் வழங்குகிறது இந்த அமைப்பு.

பிஎஸ்சி, பி.டெக், பிஇ, எம்எஸ்சி பட்டப் படிப்புகளைப் படித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பிலிருந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, நல்ல மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிஎஸ்சி ஆனர்ஸ் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளில் மாதம் ரூ.16 ஆயிரம் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் மாதம் ரூ.18 ஆயிரம் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் இதர படிப்புச் செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். தகுதியுடையவர்களுக்கு மத்திய அரசின் விதிமுறைப்படி, வீட்டு வாடகை அலவன்ஸ் வழங்கப்படும். மொத்தம் நான்கு ஆண்டுகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் படிப்புத் திறனைப் பொருத்து, இந்த உதவித் தொகை அடுத்த ஆண்டுக்கு நீட்டிக்கப்படும். தகுதியுடையவராக இருந்தால் இந்த உதவித் தொகை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும். இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் கணிதத்தில் பிஎச்டி படிக்க பதிவு செய்ய வேண்டும். எந்தக் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேருகிறாரோ, அந்தக் கல்வி நிறுவனம் மூலம் இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

இந்த கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் நேஷனல் போர்டு ஆஃப் ஹையர் மேத்மேட்டிக்ஸ் நடத்தும் எழுத்துத் தேர்வை எழுத வேண்டும். புதுதில்லி, சண்டீகர், அலகாபாத், இந்தூர், ஜபல்பூர், கோவா, மும்பை, புனே, வல்லபாவித்யாநகர், புவனேஸ்வரம், குவாஹாத்தி, கொல்கத்தா, ராஞ்சி, ஷில்லாங், பெங்களூரு, சென்னை, கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இத்தேர்வை எழுதலாம். வருகிற ஜனவரி மாதம் 19-ம் தேதி இத்தேர்வு நடைபெறுகிறது. கணிதத்தில் முதுநிலைப் படிப்பு நிலையில் உள்ள பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டரை மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வில் குறுகிய விடைகளை அளிப்பதற்கான கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, அதில் தகுதி பெறும் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை அளிக்கப்படும். கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு வினாத்தாள்களை நேஷனல் போர்டு ஆஃப் ஹையர் மேத்மேட்டிக்ஸ் இணையதளத்தில் பார்த்து, இத்தேர்வு வினாக்கள் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். சென்னையில் உள்ள மேட் சயின்ஸ் இன்ஸ்டிட்யூட், அலகாபாத்தில் உள்ள ஹரீஷ் சந்திரா ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், புனேயில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச் ஆகிய கல்வி நிறுவனங்களில் பிஎச்டி படிக்க விரும்பும் மாணவர்களும் இத்தேர்வை எழுத வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேஷனல் போர்டு ஆஃப் ஹையர் மேத்மேட்டிக்ஸ் கல்வி நிலையத்துக்கு அனுப்பக் கூடாது. ஐந்து மண்டலங்களில் உள்ள ஒருங்கிணைப்பாளர்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். பிஎச்டி ஆய்வுக்கான இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்களுக்காக பத்திரிகையிலும் இணையதளத்திலும் விளம்பர அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி, படிப்பு விவரங்கள், தேர்வு எழுத விரும்பும் இரு மையங்கள் போன்று விளம்பர அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தில் உரிய விவரங்களுடன் தனித்தாளில் பூர்த்தி செய்து புகைப்படத்தையும் ஒட்டி அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள் அனுப்பப்பட வேண்டும். விண்ணப்ப உறையில் ‘NBHM Ph.D Scholarship’ என்று குறிப்பிட வேண்டும்.

பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த (மண்டலம்-5) மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்:

Prof.S. Kesavan
Institute of Mathematical Sciences
CIT Campus
Taramani
Chennai - 600 113.
email: kesh@imsc.res.in

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 30-ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். கணக்கில் புலிகளாக விளங்கும் மாணவர்கள் உதவித் தொகையுடன் பிஎச்டி படிக்க நல்ல வாய்ப்பு இது. ஆர்வமிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: www.nbhm.dae.gov.in

No comments: