அறிவியலில் ஆராய்ச்சி மனப்பான்மையும், தேடலும் உள்ள மாணவர்கள் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச் கல்வி நிலையத்தில் பி.எஸ்.-எம்.எஸ். ஒருங்கிணைந்த ஐந்தாண்டு அறிவியல் முதுநிலை பட்டப் படிப்புகளில் பிளஸ் டூ மாணவர்கள் சேரலாம்.
பொறியியல், மருத்துவ பட்டப் படிப்புகளைப் படிப்பதில் இருக்கும் ஆர்வம் அறிவியல் பட்டப் படிப்புகளில் சேருவதில் இல்லை. இளநிலைப் பட்டப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களில் 28 சதவீத மாணவர்களே முதுநிலைப் பட்டப்படிப்பை தொடருகின்றனர். அறிவியல் முதுநிலை முடிப்பவர்களில் 5 சதவீத மாணவர்கள் மட்டும்தான் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்கின்றனர். ஆனால், திறமையான மாணவர்களை அறிவியல் பாடப் பிரிவுகளின் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக பிளஸ் டூ மாணவர்கள் சேரும் வகையில் ஒருங்கிணைந்த அறிவியல் படிப்புகள் தொடங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு பல்வேறு கல்வி உதவித் தொகைகளை வழங்குகிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின்கீழ் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச் (ஐஐஎஸ்இஆர்) கல்வி நிலையம், அறிவியல் பாடப் படிப்புகளை வழங்கும் முக்கியக் கல்வி நிறுவனம். போபால், கொல்கத்தா, மொஹாலி, புனே, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இந்தக் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அறிவியல் பாடத்தில் ஆர்வமுள்ள மாணவர்களை ஆராய்ச்சிப் படிப்புவரை கொண்டு செல்வதுதான் இந்தக் கல்வி நிலையத்தின் முக்கிய நோக்கம். அந்த வகையில் இந்தக் கல்வி நிலையத்தில் ஒருங்கிணைந்த பி.எஸ்.-எம்.எஸ். ஐந்தாண்டு படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு கே.வி.பி.ஒய்., இன்ஸ்பயர் வழங்கும் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இங்கு, உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில் பி.எஸ்.-எம்.எஸ். ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுநிலை பட்டப் படிப்பு, பிஎச்.டி., மற்றும் ஒருங்கிணைந்த பிஎச்.டி. (இந்தப் படிப்பு கொல்கத்தா மற்றும் புனேயில் உள்ள வளாகங்களில் மட்டுமே கற்றுக்கொடுக்கப்படுகிறது) படிப்பை மேற்கொள்ளலாம். இதில் ஐந்தாண்டு பி.எஸ்.-எம்.எஸ். படிப்பை மேற்கொள்ள மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. ஒருங்கிணைந்த பிஎச்.டி., படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பி.எஸ்சி., படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், கிஷோர் விக்யானிக் புரட்ஷான் யோஜனா, ஐ.ஐ.டி.-ஜே.இ.இ.2012 ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் கல்வி நிலையத்தின் மூலம் நடத்தப்படும் சயின்ஸ் ஆப்டிட்யூட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்தப் படிப்பில் சேர ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250.
கே.வி.பி.ஒய்., ஐ.ஐ.டி.ஜே.இ.இ. தேர்வு எழுதிய மாணவர்கள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: ஜூலை 11.
மற்ற பிரிவு மாணவர்கள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: ஜூலை 23.
No comments:
Post a Comment