முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பத்தை முதல் நாளில் ஆயிரக்கணக்கானோர் வாங்கிச் சென்றனர்.
மாநிலம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்காக 1.70 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு அவற்றின் விற்பனை மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது.
சென்னை நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதற்காக 2 கவுன்ட்டர்களும், பூர்த்தியான விண்ணப்பத்தை வாங்குவதற்காக 1 கவுன்ட்டரும் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்வு எழுதுவதற்காக ஏராளமான பட்டதாரிகள் ஆர்வத்துடன் விண்ணப்பத்தை வாங்கிச் சென்றனர். சென்னையில் மட்டும் முதல் நாளில் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், மாநிலம் முழுவதும் 32 மையங்களில் விண்ணப்ப விற்பனை நடைபெற்றது. இந்த மையங்களில் ஏராளமானோர் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.
இந்த விண்ணப்ப விற்பனை நவம்பர் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் அன்றே கடைசி நாள் ஆகும்.
No comments:
Post a Comment