அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 14 வகையான நலத் திட்டங்களுக்கு தமிழக அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை, பேச்சு, செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளிக் குழந்தைகளுக்கு பரிசுகளையும், மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய நூலகர்களுக்கு நல்நூலகர் விருதையும் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார். அவர் பேசியதாவது:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் கல்வித் திறனை ஊக்கப்படுத்த பல ஆக்கப்பூர்வமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவில் முதலிடங்களைப் பிடிக்கின்றனர். பள்ளிக் குழந்தை களிடம் உள்ள பிற திறன்களை வெளிக்கொண்டுவரும் நோக்கில் மாநில அளவில் நடத்தப்பட்ட செஸ் போட்டியில் இந்த ஆண்டு 15 லட்சம் குழந்தைகள் கலந்து கொண்டுள்ளனர்.
பெற்றோர், மாணவர்கள் மத்தியில் கல்வி குறித்த விழிப்புணர்வும், ஆர்வமும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே இருக்கக் கூடாது என்ற நோக்கில், பள்ளிக் கல்வியில் இதுவரை இல்லாத சாதனையாக இதுவரை சுமார் 71 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தொடர்ச்சியான 14 வகை கல்வி வளர்ச்சிக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்த ரூ.10 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. 2023-ம் ஆண்டுக்கு முன்பாகவே பள்ளிக்கல்வித் துறை தனது இலக்குகளை அடையும்.
தமிழக நூலகத் துறை சிறப்பாக செயல்பட்டு, இதுவரை 65 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 10 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
நலிவுற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மண்டலவாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, வரும் கல்வியாண்டில் மாணவர்கள் தேர்ச்சியை 95 சதவீதமாக உயர்த்த பள்ளிக்கல்வித் துறை முயன்று வருகிறது’’ என்றார் கல்வித்துறை செயலாளர் சபீதா.
விழாவில் பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.இராமேஸ்வர முருகன், மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் இளங்கோவன், மெட்ரிக் பள்ளி இயக்குநர் பிச்சை ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment