தமிழகத்தை சேர்ந்த 377 பேருக்கு இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. பள்ளியில் ஆசிரியர் தின விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடை பெற்றது. அப்போது 377 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி விருதுகளை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, “கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 53,258 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தமிழக முதல்வரின் தலைமையில் நடைபெற்று வரும் பள்ளிக் கல்வி திட்டங்கள் மேலும் தொடரும். ரஷ்யாவின் தூதராக பணியாற்றியபோது கூட டாக்டர் ராதாகிருஷ்ணன் தனது ஆசிரியர் பொறுப்பை விட்டு விலகவில்லை. அவரது பெயரால் தேசிய, மாநில விருதுகள் வழங்கப்படுவது பெருமைக்குரிய விஷயமாகும். ஆசிரியர்கள் கல்வியை மட்டும் கற்றுத் தராமல் ஒழுக்கம், நேர்மை, சமூக சிந்தனை ஆகியவற்றையும் சேர்த்து கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றார்.
பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை செயலர் த.சபிதா கூறும் போது, “கடந்த 4 ஆண்டுகளில் பள்ளிக் கல்விக்கு ரூ.64,486 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.19,634 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 88 சதவீதத்திலிருந்து 90.6 சதவீதமாக உயர்ந்துள்ளது” என்றார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை பெற்ற புழல் ஊராட்சி ஒன்றியப் பள்ளியின் தலைமையாசிரியர் ரா.சரளா கூறுகையில், “இந்த விருது என்னை மேலும் சிறப்பாக பணியாற்ற ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், என்னைப் போன்ற நல்லாசிரியர்களை அரசுப் பள்ளிகளுக்காக உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, அனைவருக்கும் கல்வி இயக்கத் தின் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மெட்ரிக் பள்ளி இயக்குநர் ரா.பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment