மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் திறனறித் தேர்வுக்கு (சிசாட்) எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும், சிவில் சர்வீசஸ் ஆர்வலர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து ஒரு வாரத்தில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிவித்திருந்தார். ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில், மாநிலங்களவையில் இப்பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஜீரோ ஹவரில் இப்பிரச்சினையை முதலில் எழுப்பிய ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், விரைவில் பிரச்சினையை தீர்ப்பதாக கூறிய அரசு தனது வாக்குறுதியை மறந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார்.
சரத் யாதவுக்கு ஆதரவாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களும் பேசினர். தீர்வு காண்பதற்கு காலவரையறை நிர்ணயிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் அரசு முடிவு எடுக்கும் என்று உறுதி அளித்தார்.
மக்களவையிலும் இப்பிரச்சினை எதிரொலித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங், யுபிஎஸ்சி தேர்வில் ஆங்கில மதிப்பெண்கள் தகுதிக்கான மதிப்பெண்களில் சேர்க்கப்படமாட்டாது என்று உறுதி அளித்தார். மேலும், 2011ல் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதலாக ஒரு முறை தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இந்த வாய்ப்பை 2015ல் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment