ஆசிரியர் கல்வியியல் படிப்புகளில் (பி.எட்.) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை (ஆக.6) தொடங்கியது.
முதல் நாளில் சிறப்புப் பிரிவின் கீழ் வரும் 141 இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வை சென்னையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் 7 அரசு கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 2,155 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முதன் முறையாக நடத்துகிறது.
கடந்த ஆண்டு வரை சென்னையில் மட்டுமே இக் கலந்தாய்வு நடத்தப்பட்டு வந்தது. இம்முறை முதன் முறையாக ஆன்-லைன் மூலம் மட்டுமின்றி சென்னை, கோவை, சேலம், மதுரை ஆகிய நான்கு இடங்களில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெறும் இக் கலந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 10 ஆயிரத்து 450 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
கலந்தாய்வின் முதல் நாளான புதன்கிழமை முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் (எஸ்.டி.) ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்தப் பிரிவின் கீழ் 141 இடங்கள் நிரப்பப்பட்டன.சென்னையில் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கலந்தாய்வு மையத்தில் இடங்களைத் தேர்வு செய்த முதல் 5 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் கல்லூரி சேர்க்கைக் கடிதங்களை வழங்கினார்.
கலந்தாய்வு தொடக்க நிகழ்ச்சிக்குப் பின்னர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறியதவது:
கலந்தாய்வு முதன் முறையாக ஆன்-லைன் மூலம் நடத்தப்படுகிறது என்பதோடு, விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் 4 வழிகளில் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.அழைப்புக் கடிதங்கள் தபால் மூலமும், மின்னஞ்சல் மூலமும், குறுஞ்செய்தி மூலமும் அனுப்பப்பட்டிருப்பதோடு, பல்கலைக்கழக இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளாதாரம், புவியியல், வரலாறு, மனை அறிவியல், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களின் கீழ் அனைத்துப் பிரிவுகளுக்கான பி.எட். கலந்தாய்வு நடைபெறும் என்றார்.
No comments:
Post a Comment